திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாய், 1139 கிராம் தங்கம், மற்றும் 18052 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளன.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. அழகிய கடற்கரையோரம் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும்.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிவிட்டால் உண்டியலில் காணிக்கையாக பணம், தங்க, வெள்ளி, பொருட்களை செலுத்துவார்கள். இந்த உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது.
கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ராமு முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் உழவாரப்பணி குழுவினர், மற்றும் கோவில் பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 1139 கிராம் தங்கமும், 18052 கிராம் வெள்ளியும், 815 வெளிநாட்டு கரன்சியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


