திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய அரசு தரப்பு கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றது.

நேரில் ஆஜராக விலக்கு மறுப்பு

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த விசாரணையின் போது தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போதுள்ள நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

மேலும், தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றால், தமிழ்நாடு அரசு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதங்கள்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு தரப்பினரின் வாதங்கள் காரசாரமாக நடைபெற்றன.

வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முபீன், "தர்காவுக்குச் சொந்தமான இடத்தில் தான் தூண் அமைந்துள்ளது. கடந்தகால நீதிமன்ற உத்தரவுகளில் 'தீபத்தூண்' என எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காணத் தயாராக உள்ளோம்," என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, "மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் ராம ரவிக்குமார் கோரியிருந்தார். அவர் கோரிய நிவாரணத்தைத் தாண்டி, தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்," என்று வாதிட்டார்.

1994 ஆம் ஆண்டின் தீர்ப்பில், மேலே உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று கூறப்படவில்லை; மாற்று இடத்தில் ஏற்றலாம் என பரிசீலனை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் மனுதாரர் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.

பேச்சுவார்த்தை முயற்சிக்கு மறுப்பு

கோவில் நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண உத்தரவிடலாமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, "பேச்சுவார்த்தை விவகாரத்தில் தீர்வு கிடைப்பது தாமதப்படுத்தப்படும்" என்று கூறி மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், "மார்கழி பிறந்துவிட்டது. அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360-க்கும் மேலான நாட்கள் உள்ளன," என்று கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் தனி நீதிபதி முடிவெடுக்க வழிவகை செய்துள்ளது.