திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை பதவியிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இரண்டு முறையும் அவர் உத்தரவிட்டும் மனுதாரர் ராம ரவிக்குமார் மலையில் தீபம் ஏற்ற தமிழக காவல்துறை மறுத்து விட்டது. நீதிபதியின் சுவாமிநாதனின் இந்த தீர்ப்பு இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டுவது போல் உள்ளதாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம்சாட்டின.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மென்ட் தீர்மானம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியது பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. மேலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது பதவி நீக்க தீர்மானம்(இம்பீச்மென்ட்) கொண்டுவர வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அளித்திருந்தனர்.

எம்.பி.க்களை பதவியிறக்கம் செய்ய வேண்டும்

இந்த நிலையில், நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை பதவியிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, ''ஐயா ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கையெழுத்து போட்ட எம்.பி.க்களை பதவிறக்க வேண்டும். ஒரு தமிழ் படத்தில் சொல்வார்கள். 'நான் நட்டுல வச்சேனு நினைச்சியா, லட்டுல வச்சேனு' நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்களை பதவியில் இருந்து இறக்குவதற்காக கையெழுத்து போடவில்லை. உங்களை உங்கள் பதவியில் இருந்து இறக்குவதற்காக நீங்கள் கையெழுத்து போட்டுள்ளீர்கள்.

நமது தர்மத்தை இவர்கள் பாதுகாப்பார்களா?

2026ம் ஆண்டு புதுச்சேரியாக இருக்கட்டும்; தமிழகமாக இருக்கட்டும் ஒட்டுப்போடுவதற்கு முன்பு நமது தர்மத்தை இவர்கள் பாதுகாப்பார்களா? நம்முடைய மூதாதையர் காலத்தில் இருந்து நம்ம காலம் அடுத்து நம்முடைய சந்தியர்களுக்கு இந்த தர்மம் போவதற்கு உறுதுணையாக இருப்பார்களா? உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே உங்களுக்கு மதிக்கத் தெரியவில்லை. சாதாரண ஆளு நானும், நீங்களும் போகும்போது உங்களை மதிப்பார்களா? என்பதை சிந்துத்து பார்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.