பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!
தமிழக அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்காக முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026 ஜனவரி 31 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் 1000 மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள்
தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆரம்ப கல்வியே அடிப்படை கல்வி என்ற நோக்கில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என மாநில பாடத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2023- 2024ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கல்வியாண்டிற்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
படிப்புதவித் தொகை மற்றும் எண்ணிக்கை
இத்தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் என மொத்தம் 1000 மாணக்கர்கள் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000(மாதம் ரூ.1000 வீதம்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
தேர்விற்கான பாடத் திட்டம்
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் TNCMTSE தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும்.
தேர்வு நேரம்
இத்தேர்வானது தாள் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10 முதல் 12 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 60 வினாக்கள்) பிற்பகல் மணி 2 முதல் 4 மணி வரையிலும் நடத்தப்படும்.
வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்
மாணாக்கர்கள் டிசம்பர் 18 முதல் 28 வரை www.dgetn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுகட்டணம் ரூ. 50/-னை டிசம்பர் 28ம் தேதிக்குள் மாணக்கர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்துதல் குறித்தான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும். எனவே. 2025-2026 கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் "தமிழ்நாடு முதனைமச்சரின் திறனாய்வுத் தேர்வினை- அறிந்துகொள்ளும் வகையில், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

