போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
தமிழகத்தில் நிலவிய கடும் பனிப்பொழிவு குறைந்து, புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், வரும் நாட்களில் பனிப்பொழிவு குறைந்து மழை தொடர வாய்ப்புள்ளது.

வாட்டி வதைத்த குளிர்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கியது. இதனால் நீர் மட்டங்கள் கிடு கிடுவென உயர்ந்து வந்தது. டிசம்பர் மாதம் தொடங்கியதால் மழை எப்படி இருக்குமோ என பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் தமிழகம் மற்றும் தலைநகர் சென்னை உள்ளிட்ட இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அஞ்சு நடுங்குகின்றனர். மேலும் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஏரிய விட்டவாரே செல்கின்றனர். ஊட்டி உள்ளிட்ட இடங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
சென்னை வானிலை நிலவரம்
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
சென்னையில் மழை
இந்நிலையில் கடும் பனிபொழிவு நிலவி வந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதாவது அடையாறு, மயிலாப்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, போரூர், தாம்பரம், பெருங்களத்தூர், கிண்டி, எழும்பூர், சென்டிரல், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் பனிபொழிவு குறைந்து மழையை எதிர்பார்க்கலாம்.
15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இதனிடையே தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், ஆகிய மழைக்கு வாய்ப்புள்ளது.

