அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி, கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார்.

Anbumani Ramadoss: பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. இதனால் பாமக இரண்டாக உடையும் சூழல் உருவாகியுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி உள்ளனர். சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை 45 நிமிடம் அன்புமணி சந்தித்து பேசினார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சமீபத்தில் ராமதாஸ் பேட்டியளித்த போது எனக்கும் அன்புமணிக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது என கூறியிருந்தார்.

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்

இதனையடுத்து அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர், வழக்கறிஞர் பாலு, மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ராமதாஸ் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் திருவள்ளூர் மணவாளன் நகரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தந்தையிடம் மகன் மன்னிப்பு கேட்பது தவறில்லை

பொதுக்குழுவில் பேசிய அன்புமணி: கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். பாமகவால் தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுக்க முடியும். என் மீது ஏதாவது கோபம் இருந்தால் அய்யா என்னை மன்னித்துவிடுங்கள் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையிடம் மகன் மன்னிப்பு கேட்பது தவறில்லை என்றும் அதைத் தந்தையர் தினத்தில் தான் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார். 100 வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும். ஐயா ராமதாஸ் மாநிலத் தலைவர் அல்ல. தேசிய தலைவர். நாட்டிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என பிரதமர் மோடி கூறினார்.

சமூகநீதியின் துரோகி திமுக

சமூக நீதிக்காக பாமகவை தொடங்கிய ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூகநீதி பற்றி பேச முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூகநீதியின் துரோகி திமுக. பாமக தொடங்கியதன் நோக்கமே நம் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான். கடினமான காலங்களை கடந்து வந்தவர், பல தியாகங்களை செய்தவர் ராமதாஸ். உருவாக்கிய கட்சியை, அவரின் கனவை நிறைவேற்றுவேன். மருத்துவர் ராமதாஸ் எதற்கும் கவலைப்பட வேண்டாம். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். கட்சியின் தலைவராக டக் டக் என நான் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.