- Home
- Tamil Nadu News
- பாமக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கம்! புதிய நிர்வாகி யார் தெரியுமா?
பாமக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கம்! புதிய நிர்வாகி யார் தெரியுமா?
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் முற்றிய நிலையில், கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் உச்சம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்தார். இதனையடுத்து இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பெருவாரியான பாமக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் புறக்கணித்துவிட்டு அன்புமணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதுவரை 60 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்
இதனையடுத்து அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பாமக பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு, மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ராமதாஸ் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதுவரை 60 மாவட்ட செயலாளர்கள், 39 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அன்புமணி அவரவர் அந்த பதவியில் தொடர்வதாக அறிவிப்பை வெளியிட்டார். இதனால் மாறி மாறி அறிவிப்பை வெளியிட்டு வருவதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
வடிவேல் ராவணன் நீக்கம்
இந்நிலையில் பாமக பொதுச்செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி, முரளி சங்கர் என்பவரை நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவருக்கு நமத கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ராமதாஸ்க்கு ஆதரவாக சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள்
இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இருப்பதுதான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அவர்தான் தெய்வம், அவர் சொல்படி நடப்போம். அவர் தலைமையில் நடக்கும் கூட்டம்தான் செல்லும் என தைலாபுரம் இல்லத்தில் சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் பேட்டியளித்துள்ளார்.

