அண்ணாமலை யார் எந்தத்துறைகு அமைச்சராக இருக்கிறார் என்பதுகூட தெரியாமல் பேசி இருக்கிறார். கே.என்.நேருவை குற்றம் சாட்டுவதாக நினைத்து ஊரக வளர்ச்சித்துறையும் அவரது துறைக்கு கீழ் இருப்பது போல் பேசி இருக்கிறார்.

ஊராட்சி எழுத்தாளர்கள் பணி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை. அண்ணாமலை அமைச்சர்களின் இலாகா பற்றி தெரியாமல் பேசுகிறார் எனக் குற்றம்சாட்டி உள்ளனர் ஊரகவளர்ச்சித்துறையினர்.

கே.என்.நேரு மீது குற்றசாட்டிய அண்ணாமலை, ‘‘திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், ரூ.1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ரூ. 888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது குறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய திமுக அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், கே.என்.நேருவின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது.

பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், ஊராட்சி செயலாளர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு நடத்தி அதில் தகுதி பெற்றவர்களை ஊராட்சி செயலாளர்களாக நியமிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும், இன்று டிசம்பர் 12ல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று திமுக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

பல ஆயிரம் இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்த நிலையில், திடீரென நிர்வாகக் காரணங்களால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக, அனைவருக்கும் நேற்று மாலை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர்கள், தமிழக அரசின் அதிகார பூர்வ இணையதளத்தில் பார்த்தபோது, நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலிலேயே குளறுபடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற இளைஞர்களைத் தகுதி நீக்கம் செய்தும், அவர்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களைத் தேர்வு செய்தும், மோசடி செய்திருக்கிறது திமுக அரசு. அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டுகள் தங்கள் விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்து, கடும் உழைப்பைக் கொடுத்துக் காத்துக் கொண்டிருந்த தகுதியான பல ஆயிரம் இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.

அந்த லிஸ்ட் எவ்வளவு குளறுபடியாக இருக்கிறது என உதாரணத்தை சுட்டிக்காட்டுறேன். உதாரணத்துக்கு கோயம்புத்தூரில் யாரெல்லாம் தேர்வில் பிசி பிரிவிவை சேர்ந்த பெண் 500 மார்க்குக்கு 494 வாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 493 வாங்கிய ஒரு பெண்ணும் தேர்வாகி உள்ளார். அதே பிசி பிரிவை சேர்ந்த பெண் 500க்கு 496 வாங்கியும் தேர்வாகவில்லை.தொடர்ச்சியாக ஒரு மூத்த அமைச்சரான கே.என்.நேருவின் துறையில் பெரிய அளவில் குழப்பம் இருக்கிறது’’ எனக் குற்றம்சாட்டி இருந்தார் அண்ணாமலை.

இதுகுறித்து ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அண்ணாமலை யார் எந்தத்துறைகு அமைச்சராக இருக்கிறார் என்பதுகூட தெரியாமல் பேசி இருக்கிறார். கே.என்.நேருவை குற்றம் சாட்டுவதாக நினைத்து ஊரக வளர்ச்சித்துறையும் அவரது துறைக்கு கீழ் இருப்பது போல் பேசி இருக்கிறார். ஊரக வளர்ச்சித்துறை கே.என்.நேருவின் துறையிலேயே இல்லை. ஊரக வளர்ச்சித்துறைக்கு ஐ.பெரியசாமி தான் அமைச்சராக உள்ளார். பாஜகவின் மிகப்பரிய தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு இது தெரியாமல் போனதா? அல்லது தொடர்ந்து கே.என்.நேரு மீது குற்றம்சாட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.

அதேபோல ஊராட்சி செயலாளர் பணித் தேர்வில் எந்த மோசடியும், குளறுபடியும் நடக்கவில்லை. உதாரணத்துக்கு பொதுக்கோட்டாவில் 496 மதிப்பெண் பெற்றவர் முதலிடத்திலும் 493 மதிப்பெண் பெற்றவர் அடுத்த இடத்திலும் இருப்பார்கள். உட்கோட்டா அடிப்படையில் எம்பிசி பட்டியலில் உள்ள 493 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெறுகிறார். பிசி கோட்டாவில் 496 மதிப்பெண் பெற்றவர் நிராகரிக்கப்படுகிறார். ஊராட்சி செயலாளர் பணிக்கான செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. குளறுபடிகள் ஒரு துளியும் நடக்கவில்லை. பிரச்சினைகள் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளோம் எனக்கூறுகிறார்கள். இந்தத் தேர்வு முறையில் எந்த குழப்பமும் இல்லை’’ என அடித்துக் கூறுகின்றனர்.