டோட்டல் காலி..! சென்னை குலுங்கவில்லை.. காலை வாரிய ஜிகே மணி.. அன்புமணி தான் டாப்
கூட்டம் சேர்க்க வேண்டும் என ஜி.கே.மணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலை வாரிவிட்டது ராமதாஸை அதிருப்தி அடைய செய்துள்ளது.

சென்னையில் பாமக போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றக் கோரியும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
போராட்டத்துக்கு கூட்டமே வரவில்லை
இந்த போராட்டம் குறித்து நேற்று பெருமையுடன் பேசிருந்த ராமதாஸ், 'பாமக நடத்தப்போகும் போராட்டத்தால் சென்னையே குலுங்கப் போகிறது பாருங்கள்' என்று சொல்லி இருந்தார். ஆனால் இன்று போராட்டத்துக்கு வந்த ராமதாஸுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் போராட்டத்தில் கூட்டமே இல்லை. காலை 10 மணிக்கு போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், காலை 11.30 மணி வரையிலும் சுத்தமாக கூட்டமே வரவில்லை.
நாற்காலிகள் காலி
அங்கிருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன. ராமதாஸ் தரப்பு பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் வரவில்லை. மேடைக்கு வந்த ராமதாஸின் ஆதரவாளர் ஜி.கே.மணி இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொதுவாக ஒரு கட்சி கூட்டம் அல்லது போராட்டம் நடத்தப்போகிறது என்றால் முன்கூட்டியே அந்த கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு விடுவது வழக்கம்.
காலைவாரிய ஜி.கே.மணி; ராமதாஸ் அப்செட்
ஆனால் நீண்ட நேரமாக கூட்டமே சேராததால் ஜி.கே.மணி உள்ளிட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நீண்ட நேரம் கழித்தே போராட்டத்துக்கு ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் வந்தனர். அதுவும் அவர்கள் 500 முதல் 1,000 பேர் வரையில் தான் இருந்தனர்.
இந்த சொற்ப கூட்டத்தை பார்த்ததும் போராட்ட மேடைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் கடும் அப்செட் ஆகி விட்டாராம். கூட்டம் சேர்க்க வேண்டும் என ஜி.கே.மணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலை வாரிவிட்டது ராமதாஸை அதிருப்தி அடைய செய்துள்ளது.
அன்புமணி கட்டுப்பாட்டில் பாமக
அன்புமணி ஆதரவாளர்கள், ராமதாஸ் ஆதரவாளர்கள் என பாமக பிரிந்து கிடக்கும் நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் அன்புமணி கட்டுப்பாட்டில் தான் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லியில் ராமதாஸ் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் சுத்தமாக கூட்டமே வரவில்லை. அதுவும் இந்திகாரர்களுக்கு பணம் கொடுத்து வந்து அவர்களுக்கு ராமதாஸின் முகமூடி போட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செய்தது நகைப்புக்குள்ளானது.
இனி ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருளை நம்பி பயனில்லை
அடுத்தடுத்த இரண்டு போராட்டங்களில் ராமதாஸ் தரப்புக்கு கூட்டம் சேராதது பாமக அன்புமணி கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை பறைசாற்றுகிறது. இது அன்புமணி தரப்புக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் தரப்புக்கு கூட்டம் சேர்ந்து விடக்கூடாது என்று உறுதியாக இருந்த அன்புமணி கூட்டம் செல்வதை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இனி ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருளை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு ராமதாஸ் வந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அனைவரின் எதிர்பார்ப்பு இதுதான்
திராவிட கட்சிகளுக்கு போட்டியளிக்ககூடிய அளவுக்கு பெரிய கட்சியாக பாமக இருக்கும் நிலையில், ராமதாஸும், அன்புமணியும் கருத்து வேறுபாடுகளை களைந்து விட்டு ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

