உத்தரப் பிரதேச அரசு, பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், திரை நேரத்தைக் குறைக்கவும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் 10 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், செல்போன் மற்றும் கணினித் திரை நேரத்தைக் (Screen Time) குறைக்கவும் உத்தரப் பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் செய்தித்தாள் வாசிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினசரி 10 நிமிட வாசிப்பு

அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பார்த்த சாரதி சென் சர்மா இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பள்ளியில் காலை வழிபாட்டின் போது 'செய்தி வாசிப்பு'க்காக பிரத்யேகமாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் சுழற்சி முறையில் தேசிய, சர்வதேச, மற்றும் விளையாட்டுச் செய்திகளின் முக்கிய அம்சங்களையும், தலையங்கக் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும்.

மாணவர்களிடம் நேர்மறை எண்ணங்களை உருவாக்க, முக்கிய நேர்மறைச் செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஏன் இந்த மாற்றம்? - அரசின் விளக்கம்

செய்தித்தாள்களை வாசிப்பதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளை அரசு பட்டியலிட்டுள்ளது.

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வது எதிர்காலப் போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் உதவும். வழக்கமான வாசிப்பு மாணவர்களின் சொல்லகராதி (Vocabulary) மற்றும் எழுத்து நடையை மேம்படுத்தும்.

தலையங்கக் கட்டுரைகளை வாசிப்பது மாணவர்களிடம் தர்க்கரீதியான சிந்தனையை வளர்க்கும். குறிப்பாக, 'போலிச் செய்திகளை' (Fake News) அடையாளம் காணும் திறனை இது உருவாக்கும்.

செய்தித்தாள்களில் வரும் சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் மாணவர்களின் மூளைக்கு வேலை கொடுத்து, சிக்கல்களைத் தீர்க்கும் திறனை வளர்க்கின்றன.

திரை நேரத்தைக் குறைக்கும் முயற்சி

நவம்பர் மாதமே வாசிப்பு கலாச்சாரத்தை வளர்க்க ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த டிசம்பர் 23 உத்தரவு வந்துள்ளது. டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, காகித வடிவிலான செய்தித்தாள்களை வாசிப்பது மாணவர்களின் கவனத்தையும், ஒருமித்த சிந்தனையையும் அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.

"இது ஒரு அறிவுரை மட்டுமல்ல, அரசுப் பள்ளிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல். தனியார் பள்ளிகளும் விருப்பப்பட்டால் இதைப் பின்பற்றலாம்," என சென் சர்மா தெரிவித்துள்ளார்.

அறிவியல், கலாச்சாரம், விளையாட்டு எனப் பல்வேறு துறைகளை ஒரே இடத்தில் அறிந்துகொள்ளச் செய்தித்தாள்கள் ஒரு சிறந்த பாலமாக அமையும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.