இந்திய ராணுவம் தனது சமூக வலைதளக் கொள்கையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இனி இன்ஸ்டாகிராமை தகவல்களைப் பார்க்க மட்டுமே பயன்படுத்த முடியும். லைக், கமெண்ட், ஷேர் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகளில் ராணுவம் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ராணுவத்தினர் இனி இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியைப் பயன்படுத்தலாம். ஆனால், அதில் எதையும் பதிவிடவோ அல்லது கருத்துச் சொல்லவோ அனுமதி இல்லை.

புதிய விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டாகிராமை 'வெறும் பார்வையாளர்களாக' (Passive Observers) மட்டுமே பயன்படுத்த முடியும்.

செய்திகளை வாசிக்கவும், தகவல்களைத் திரட்டவும், பொதுவான விழிப்புணர்வுக்காகவும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவிடுவது (Post), மற்றவர்களின் பதிவுகளை லைக் (Like) செய்வது, கருத்துகளைப் பதிவிடுவது (Comment) அல்லது பகிர்தல் (Share) ஆகியவை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

ஏன் இந்த மாற்றம்?

வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் 'ஹனி ட்ராப்' (Honey Trap) மூலம் ராணுவ வீரர்களைக் குறிவைப்பதையும், அதன் மூலம் ராணுவ ரகசியங்கள் கசிவதையும் தடுக்கவே இத்தகைய கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன.

2020-ஆம் ஆண்டில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகளைப் பயன்படுத்த ராணுவம் முழுத் தடை விதித்திருந்தது. தற்போது, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வீரர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக, 'பார்ப்பதற்கு மட்டும்' (Viewing only) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தவறான அல்லது போலியான செய்திகளை இணையத்தில் கண்டால், அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"ஸ்மார்ட்போன் அத்தியாவசியம்"

சமீபத்தில் நடைபெற்ற 'சாணக்யா பாதுகாப்பு உரையாடல்' (Chanakya Defence Dialogue) நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

"ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழவும், புத்தகங்களை வாசிக்கவும் ஸ்மார்ட்போன்கள் இன்று மிக அவசியம். எதற்கும் உடனே எதிர்வினையாற்றுவதை விட, நிதானமாகச் சிந்தித்து பதில் அளிப்பதையே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், தற்போதைக்கு பார்ப்பதற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளோம். நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு தாராளமாகப் பதிவுகளுக்கு பதில் அளிக்கலாம்," என அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

பிற செயலிகளுக்கான விதிகள்

வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளில் ரகசியமற்ற பொதுவான தகவல்களைத் தெரிந்த நபர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ள அனுமதி உண்டு. லிங்க்ட்இன் (LinkedIn) செயலியில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களுக்கும், சுயவிபரக் குறிப்புகளை (Resume) பதிவேற்றவும் மட்டும் பயன்படுத்தலாம். எக்ஸ் (X), யூடியூப் தளங்களிலும் இன்ஸ்டாகிராமைப் போலவே, தகவல்களைப் பார்க்க மட்டுமே அனுமதி.

ராணுவத்தின் இந்த அதிரடி முடிவு, வீரர்களின் மனநலனையும் பாதுகாப்பையும் சமமாகப் பேணும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.