கனடாவின் டொராண்டோவில், இந்தியாவைச் சேர்ந்த 20 வயது முனைவர் பட்ட மாணவர் ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில், குற்றவாளி தப்பியோடிய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ (UTSC) வளாகத்திற்கு அருகே, இந்தியாவைச் சேர்ந்த 20 வயது முனைவர் பட்ட (PhD) மாணவர் ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 3:30 மணியளவில் (உள்ளூர் நேரம்), டொராண்டோவின் 'ஹைலேண்ட் கிரீக் ட்ரெயில்' (Highland Creek Trail) மற்றும் 'ஓல்ட் கிங்ஸ்டன் ரோடு' சந்திப்பிற்கு அருகே ஒருவர் காயமடைந்து கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கிடந்த ஷிவாங்கை மீட்டனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது இந்த ஆண்டில் டொராண்டோவில் நடந்த 41-வது கொலைச் சம்பவமாகும்.

யார் இந்த ஷிவாங்க் அவஸ்தி?

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் மூன்றாம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வை (Life Sciences) மேற்கொண்டு வந்தார்.

இவர் பல்கலைக்கழகத்தின் 'சியர்லீடிங்' (Cheerleading) குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்.

"ஷிவாங்க் எப்போதுமே மற்றவர்களை உற்சாகப்படுத்தும் குணம் கொண்டவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது," என அவரது சியர்லீடிங் குழுவினர் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

குற்றவாளி குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. துப்பாக்கியால் சுட்ட நபர் போலீஸ் வருவதற்கு முன்பே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கட்டிடங்களுக்குள் இருந்தவர்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வெளியிடங்களில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். அந்தப் பகுதியில் உள்ள நடைபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்திய தூதரகம் இரங்கல்

டொராண்டோவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

"இளம் இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தியின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். கனடா அதிகாரிகளுடன் இணைந்து தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது," என டொராண்டோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.