காசா மேற்கு கரையில், தொழுகை செய்துகொண்டிருந்த பாலஸ்தீனியர் மீது இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் தனது வாகனத்தை மோதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, அந்த வீரர் ராணுவப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில், சாலையில் ஓரமாக அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர் மீது இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் தனது ராணுவ வாகனத்தை மோதச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழுகை செய்துகொண்டிருந்த இளைஞர்
நேற்று (வியாழக்கிழமை), ரமல்லாவிற்கு வடக்கே உள்ள டெய்ர் ஜரிர் (Deir Jarir) கிராமத்தின் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவில், சாலையில் மண்டியிட்டுத் தொழுதுகொண்டிருந்த ஒரு பாலஸ்தீனியர் மீது, முதுகில் துப்பாக்கியை மாட்டிக்கொண்டு ராணுவ வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வேண்டுமென்றே வாகனத்தை மோதவிடும் காட்சி பதிவாகியுள்ளது.
வாகனம் மோதிய வேகத்தில் அந்த பாலஸ்தீனியர் நிலைதடுமாறி கீழே விழுகிறார். அதன் பிறகு வாகனத்தில் இருந்து இறங்கிய அந்த நபர், கீழே விழுந்து கிடப்பவரைப் பார்த்து ஆக்ரோஷமாக கத்தி, அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு சைகை காட்டுகிறார்.
இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கை
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் (IDF) விளக்கம் அளித்துள்ளது.
அந்த நபர் இஸ்ரேலிய ராணுவத்தின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள வீரர் என்றும், அவர் தனது அதிகாரத்தை மீறிச் செயல்பட்டதால் உடனடியாக ராணுவப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது 5 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் ஏற்கெனவே அந்த கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்குள்ளான பாலஸ்தீனியரின் தந்தை மஜ்தி அபு மொகோ (Majdi Abu Mokho) கூறுகையில், "எனது மகனின் இரண்டு கால்களிலும் பலத்த வலி உள்ளது. அந்த நபர் அடிக்கடி எங்கள் கிராமத்திற்கு அருகே வந்து மக்களைத் துன்புறுத்தி வருகிறார்," என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகரிக்கும் வன்முறை
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டு மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறைகள் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அக்டோபர் 2023 முதல் அக்டோபர் 2025 வரையிலான காலப்பகுதியில், மேற்கு கரையில் 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், பாலஸ்தீனியர்களின் தாக்குதலில் 57 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.


