- Home
- Tamil Nadu News
- இனி கவலை வேண்டாம்.! ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.! வெளியான சூப்பர் அறிவிப்பு!
இனி கவலை வேண்டாம்.! ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.! வெளியான சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் தாய்மானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் கைரேகை சரிபார்ப்பு சிக்கல்கள் எழுந்தன. இதற்கு தீர்வாக ப்ராக்ஸி முறையில் பதிவேட்டில் கையொப்பம் பெற்று பொருட்களை வழங்க உத்தரவு.

ரேஷன் கடைகள்
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2 கோடியே 26 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரிசி இலவசமாக அரிசியும், பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள்.
வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகம்
இந்நிலையில் தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் தாய்மானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி ரேஷன் கடைஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து பொருட்களை வழங்கி வருகின்றனர். ஒருசில இடங்களில் சிக்னல் பிரச்னையால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு செய்வதில் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
கண் கருவிழி சரிபார்ப்பு முறை
அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் நியாய விலை, அங்காடி பணியாளர்கள் பொது விநியோகத் திட்டப் பொருட்களை பயனாளர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கை ரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பட்டியலிட முடியாததால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாமல் அலைக்கழிப்பதாக மாவட்டங்களிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அலைகழிக்கக் கூடாது
எனவே இத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும்போது கைரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், ப்ராக்ஸி முறையில் பயனாளர்களுக்கு உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக்கொண்டு பொருட்களை வழங்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு எவ்வித சூழ்நிலையிலும் பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்காமல் அலைகழிக்கக் கூடாது என்பதை அனைத்து நியாய விலை அங்காடி பணியாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

