- Home
- Tamil Nadu News
- இந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலைமை தான் எங்களுக்கும்! பழைய பென்ஷன் தான் வேண்டும்! பெருகும் ஆதரவு விழி பிதுங்கும் முதல்வர்!
இந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலைமை தான் எங்களுக்கும்! பழைய பென்ஷன் தான் வேண்டும்! பெருகும் ஆதரவு விழி பிதுங்கும் முதல்வர்!
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் (CPS) இறந்த ஆசிரியை ஒருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்காக OPS திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) உள்ளிட்ட கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக்கோரி அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 22ம் தேதி அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை ஜனவரி 6ம் தேதி முதல் ஜாக்டோ–ஜியோ போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளனர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
இதுதொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வருகிற 6-ம் தேதி ஜாக்டோ–ஜியோ (JACTO-GEO) அமைப்பு அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகளை விளக்கும் வகையில் பேரையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணியாற்றிய ரோசன் கதீஜா பீவி கடந்த அக்டோபர் மாதம் திடீரென உயிரிழந்த சம்பவத்தையும் ஆசிரியர் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. CPS திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்ததால், அவரது மறைவுக்கு பின்னர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவருடைய இரண்டு மகன்களும் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.
முதல்வர் ஸ்டாலின்
இந்த துயரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பிற ஆசிரியர் சங்கங்களின் உதவியுடன் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 700 தொகையை திரட்டி அவரது குடும்பத்தினருக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனிதநேயத்தின் அடையாளமாக இருந்தாலும் அரசு வழங்க வேண்டிய அடிப்படை பாதுபாப்பை ஆசிரியர்கள் தங்களால் நிறைவேற்ற வேண்டிய அவலம் CPS திட்டத்தின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதிருக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவும், தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது அவசியம் என சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தற்போது ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருப்பதால் ஜனவரி 6ம் தேதிக்கு பிறகு போராட்டம் தீவிரம் அடையும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.

