- Home
- Tamil Nadu News
- யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்? லெப்ட் ரைட் வாங்கிய கையோடு சென்னை ஐகோர்ட் ஜாமீன்!
யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்? லெப்ட் ரைட் வாங்கிய கையோடு சென்னை ஐகோர்ட் ஜாமீன்!
Savukku Shankar: பணம் கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.

திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் போலீசார் கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவரது மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் பி.தனபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை மற்றும் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் சவுக்கு சங்கர் தரப்பில் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு சங்கரின் ஊழியர் ஒருவரது வங்கிக் கணக்கில் அடையாளம் தெரியாத நபர் மூலம் ரூ. 94,000 பணம் அனுப்பப்பட்டுள்ளது. இது சங்கரைச் சிக்க வைப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றார்.
அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதாவது யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? அதுமட்டுமல்லாமல் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றார்.
மேலும் எவ்வளவோ வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் போது எந்த ஒரு வழக்கிலும் காவல்துறை இதுபோன்ற ஆர்வத்தை காட்டியது கிடையாது என தெரிவித்த இந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

