உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?
தயிரில் சர்க்கரை அல்லது உப்பு இவை இரண்டில் எது சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Curd with Sugar or Salt: Which Is Healthier?
தயிர் ஆரோக்கியமான ஒரு சூப்பர் ஃபுட். இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் தயிர் பெரிதும் உதவும் என்று நாம் ஏற்கனவே அறிந்ததே. இத்தகைய சூழ்நிலையில், தயிரில் சிலர் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டில் எது சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிரின் ஆரோக்கிய நன்மைகள் :
தயிரில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை எளிதாக்கும்.மேலும் தயிரில் நிறைந்திருக்கும் கல்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகளை வலுவாக்கவும், தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதுதவிர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் தயிர் பெரிதும் உதவுகிறது.
தயிரில் உப்பு :
தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவது ரொம்ப நல்லது. ஏனெனில் தயிரில் ஏற்கனவே புரோபயாடிக் பண்புகள் உள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உப்பு சேர்த்தால் செரிமான நொதிகளின் உற்பத்தியை மேலும் தூண்டி, செரிமானத்தை துரிதப்படுத்தும். குறிப்பாக செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதுபோல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியர்வை மூலம் எலக்ட்ரோலைட்டுகள் இழக்கப்படும். எனவே இவர்கள் தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.
கவனிக்க வேண்டியவை : உப்பு அதிகமாக சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும். அதுபோல சுத்திகரிக்கப்பட்ட உப்புக்கு பதிலாக இந்துப்பு, கருப்பு பயன்படுத்துவது நல்லது.
தயிரில் சர்க்கரை :
தயிரில் சர்க்கரை சேர்ப்பது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இப்படி சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை வழங்கும். ஆனால் இதை அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே உடல் பருமன் உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம். அதுபோல சர்க்கரை நோயாளிகளும் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
எது சிறந்தது?
சுவையில் இவை இரண்டுமே சிறந்தது தான். ஆனால் ஆரோக்கியத்திற்கு எது பெஸ்ட் என்றால், இவை இரண்டுமே சேர்க்காத வெறும் தயிரே தான் நல்லது. வேண்டுமானால் வெறும் தயிரில் சிறிதளவு நட்ஸ்கள், விதைகள், பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் தயிருக்கு கூடுதல் சுவை மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும். தயிர் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதால் அதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

