வங்கதேசத்தில் அரசியல் கலவரங்கள் மற்றும் இளம் செயற்பாட்டாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதியின் கொலையால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புர்கா/ஹிஜாப் அணியாத பெண்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
வங்கதேசம் தற்போது மீண்டும் ஒரு பதற்றமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. அரசியல் கலவரங்கள், போராட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் வீடியோக்கள் நாட்டின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கடும் கவலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, மத சுதந்திரம் மற்றும் தனிநபர் உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இரண்டு வீடியோக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. அந்த வீடியோக்களில் புர்கா/ ஹிஜாப் அணியாத பெண்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் உடை தேர்வுக்காகவே குறிவைக்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வீடியோவில், மேற்கத்திய உடை அணிந்திருந்த ஒரு கிறிஸ்தவ பெண் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. புர்கா/ ஹிஜாப் அணியவில்லை என்பதே தாக்குதலுக்கான காரணம் என சமூக ஊடக பதிவுகள் கூறுகின்றன. இந்த காட்சிகள் அதிர்ச்சியையு ஏற்படுத்தியது.
மற்றொரு வைரல் வீடியோவில், இரண்டு முஸ்லிம் பெண்கள் புர்கா/ ஹிஜாப் அணியாததால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் உண்மையெனில், அந்த பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு நேரடியான அச்சுறுத்தலாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலுக்கு நடுவில், இளம் அரசியல் செயற்பாட்டாளரான ஷெரீப் உஸ்மான் ஹாதியின் கொலை வங்கதேசத்தை மேலும் கலங்கடித்துள்ளது. டாக்காவில் மர்ம நபர்களால் சுடப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புப் படைகளும் போராட்டக்காரர்களும் மோதியதாக தகவல்கள் வெளியாகின. ஊடக அலுவலகங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பாதுகாப்பு நிலை மேலும் பதற்றமாகியுள்ளது.
இதற்கிடையே, பெண்கள் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் வீடியோக்கள் உண்மையா அல்லது தவறான பிரச்சாரம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இல்லை. இருப்பினும், இதுபோன்ற செய்திகள் சமூகத்தில் அச்சத்தையும் குழப்பத்தையும் அதிகரித்து, வங்கதேசத்தின் சர்வதேச பிம்பம் குறித்த கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.


