தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் திறந்த வெளியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரை காண வேண்டும் என்ற முனைப்பில் அதிகாலை முதலே தொண்டர்கள் சாரை சாரையாகக் குவியத் தொடங்கி உள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தைத் தொடர்ந்து திறந்த வெளியில் மக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் காஞ்சிபுரத்தில் அரங்கிற்குளும், புதுச்சேரியில் திறந்த வெளியிலும் மக்கள் சந்திப்பை நிகழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று ஈரோட்டில் விஜய் திறந்த வெளியில் மக்கள் சந்திப்பை நிகழ்த்துகிறார். விஜயமங்களம் அடுத்த சரளை பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் விஜய் இந்த சந்திப்பை நிகழ்த்துகிறார்.

முன்னதாக புதுச்சேரியில் தொண்டர்கள் கியூஆர் கோடு முறையில் அடையாள சீட்டு வழங்கப்பட்டு, 5000 நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய கூட்டத்தில் அனுமதி சீட்டு, அடையாள அட்டை என எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. விஜய்யை காண நினைக்கும் யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். ஆனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டம் என்பதாலும், கரூர் சம்பவத்திற்கு பின்னர் திறந்தவெளியில் நடைபெறும் கூட்டம் என்பதாலும் இன்றையக் கூட்டம் மிகவும் முக்கயத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் சுமார் 1500 காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாலை முதலே தொண்டர்கள் சாரை சாரையாகக் குவிந்து வருகின்றனர்.