தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தான் அமமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதற்கு அண்ணாமலை காரணம் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து இதுவரை நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் கூட்டணியை தலைமை தாங்கக்கூடிய சில கட்சிகள் எங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்களும், தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்களும் எம்ஜிஆரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்சியை வழிநடத்த முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஓர் இருவரின் சுயநலம், சுய லாபம், பதவி ஆசைக்காக அம்மாவின் தொண்டர்களை பிரித்து விட்டார்கள். வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு பாடம் கற்பித்து ஓரணியில் இணையும் என நம்புகிறேன். 2021 தேர்தலிலும் பாஜக தலைவர்கள் அம்மாவின் தொண்டர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்கள். தற்போதும் முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்போது கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களை அழைத்து சுமூக முடிவெடுக்க பேசுவது மிரட்டுவதாகவோ, தலையீடு செய்வதாகவோ நான் கருதவில்லை. நட்பு ரீதியாகவே அணுகி பேசுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 53 காலம் ஆண்டுகள் அதிமுகவில் இருந்தவர். 2021, 24 தேர்தலுக்குப் பிறகு கட்சி ஒன்றாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என கருத்துக்களை முன்வைத்தார்‌. அதனை ஏற்காதவர்கள் அவரை கட்சியிலிருந்து விலக்கினார்கள். அந்த தவறுகளை செய்பவர்களை திருத்துவதற்கு நாங்கள் ஒரு பாணியில் சென்றால் அவர் ஒரு பாதையில் பயணிக்கிறார். அவர் கோபதாபத்தில் எடுத்த முடிவாக பார்க்கவில்லை. நிதானமாக சிந்தித்து முடிவெடுத்து இருக்கிறார்.

செல்லூர் ராஜு எப்போதும் காமெடியாக பேசிக் கொண்டிருப்பவர் அதிமுக என்னும் ஆலமரத்தில் இருந்து இலைகள் உதிரவில்லை. செங்கோட்டையன் போன்ற விழுதுகள் விலகிச் செல்கிறது. இதனை தேர்தல் முடிவு பாடத்திலிருந்து கற்றுக்கொள்வார்கள்.

தமிழ்நாடு ஒரு அமைதி பூங்கா. இங்கு கடவுளின் பெயரிலோ மதத்தின் பெயரிலோ அரசியல் படுத்தி கலவரங்களாக உருவாக்காமல் அரசியல் கட்சியினர், அமைப்புகள் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மக்களின் விருப்பம். இதை அரசும், நீதிமன்றமும் முறையாக செய்யும் என நம்புகிறோம்.

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமமுக அமையும் கூட்டணி வலிமையானதாக வெற்றி பெறும் கூட்டணியாக அமையும். கூட்டணி தொடர்பாக எந்த கண்டிஷனும் முன் வைக்கப்படவில்லை நட்பு ரீதியில் பேசுகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் நாங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் அண்ணாமலை அரியலைக் கடந்து எனது நல்ல நண்பர். தற்போத கூட வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்பொழுதெல்லாம் மீண்டும் NDA கூட்டணிக்குள் வரவேண்டும் என நட்பு ரீதியாக அழைப்பு விடுப்பார். மற்றபடி கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலை காரணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.