தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் நான்காண்டு நிறைவு விழாவில், அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
4 ஆண்டுகளை நிறைவு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் நான்காண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரையில்: இந்த 4 ஆண்டுகளில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகளை நம்முடைய முதலமைச்சர் செய்து இருக்கின்றார்கள். இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள் என்று பார்த்து, பார்த்து ஒவ்வொரு பிரிவுக்கும் என்னென்ன தேவையோ அதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் செய்திருக்கின்றார்கள். இதே நாள் மே 7 ஆம் தேதி, 2021 வருடம் அன்றைக்கு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அன்று ஒலித்த அந்த குரல், இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு 2 ஆண்டுகள் நிறைவு செய்தபோது, நம்முடைய அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டினுடைய ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று வந்தது. இன்றைக்கு 4 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற இந்த நேரத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு தனி நபரும் நம்முடைய அரசால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
ஒட்டுமொத்த இந்தியாவே பின்பற்றுகிறது
அதனால்தான் இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் கொடுத்து வருகின்ற தமிழ்நாட்டினுடைய திட்டங்களை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவே பின்பற்றுகிறது. இது வெறும் திராவிட மாடல் அல்ல. இது சாதனை மாடல் என்பதை நாம் நிரூபித்து காட்டியிருக்கின்றோம். 2021-இல் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் நம்முடைய முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்தே, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை உறுதி செய்கின்ற விடியல் பயணம் திட்டம். அதைத் தொடர்ந்து, அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், தாய்மார்கள் காலையில் எழுந்து சமையல் செய்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. எனவே, அந்தப்பணியை எளிதாக்கிட முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டத்தை தந்தார்கள் நம்முடைய முதலமைச்சர்.
விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவில் நம்பர் 1 இடத்தை நோக்கி
இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு திட்டம். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் மாதம் 1,000 ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றார்கள். ஜுன் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதிதாகவும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை நம்முடைய முதலமைச்சர் அளித்திருக்கின்றார்கள். மாணவர்களுடைய உயர்கல்வி வேலைவாய்ப்புக்கு துணை நிற்க நான் முதல்வன் திட்டம், தனி வேளாண் பட்ஜெட், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48, முதல்வர் மருந்தகம் போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வை மாற்றி இருக்கின்றன. இதையெல்லாம் விட மிக, மிக சிறந்த ஒரு திட்டம், எனக்கு பெருமையோடு சொல்லக்கூடிய ஒரு திட்டம் என்னவென்றால், உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்ற ஒரு புரட்சி திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அறிவித்தார்கள். அதற்கு பிறகு, இந்தியாவிலேயே அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலமாக இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு உயர்ந்து நிற்கின்றது. அதே போல், தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் என்றும் அறிவித்தார்கள். உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவித்தார்கள். மற்ற துறைகளுக்கு இணையாக விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவில் நம்பர் 1 இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் திட்டங்களால் தமிழ்நாடு வளர்ச்சி
ஏராளமான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் மாநில அளவிலான போட்டிகளும் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறோம். இந்த ஆண்டு 25 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் அந்த வேலை வாய்ப்பை பெற்றுத்தருவோம் என்ற அந்த உறுதியை நாங்கள் எடுத்திருக்கின்றோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ச்சியில் இருந்த தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி சதவீதம், நம்முடைய முதலமைச்சர் திட்டங்களால், இன்றைக்கு 9.69 சதவீதத்துடன் இந்தியாவிலேயே முதல் இடைத்தை அடைந்திருக்கின்றது. இந்த சாதனைகளோடு நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என தெரிவித்துள்ளார்.


