தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இந்தியாவில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதலில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டதால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்
இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.SIR என்னும் பெயரில் மத்திய பாஜக அரசு வாக்குத்திருட்டு சதியில் ஈடுபடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டின.
அனைத்துக் கட்சி கூட்டம்
இந்நிலையில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அனைத்து கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள், விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட 12 கட்சிகளின் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
SIR பணிகள் எப்படி நடைபெறும்?
இதில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ஏன் நடைபெறுகிறது? SIR பணிகள் எப்படி நடைபெறும்? அதில் உள்ள சந்தேகங்கள் குறித்து குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார். மேலும் தமிழ்நாட்டில் 2026 பிப்ரவரி முதல்வாரம் வரை நடைபெற உள்ள, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கையில் 77,000 அதிகாரிகள் பணிபுரிவார்கள் என்றும் SIR நடவடிக்கையின் செயல்முறையை அறிந்துகொள்ளவும், மாநிலம் முழுவதும் அதை நடைமுறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
எதிர்ப்பு தெரிவித்து திமுக மனு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவரும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக்கிடம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் உச்சகாலமான இம்மாதங்களில் எஸ்.ஐ.ஆர்.ரை செயல்படுத்துவது மிகவும் சிரமம் என்பதால் எஸ்.ஐ.ஆர். நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் எஸ்.ஐ.ஆர்-ல் உள்ள குறைகள், நடைமுறை சிக்கல்கள், தெளிவற்ற மற்றும் தவறான வழிகாட்டல்கள் அடங்கிய மனுவை வழங்கினர்.


