பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலால் பஞ்சாப்பில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு படித்து வந்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர். 

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்த தாக்குதலுக்கு இந்தியாவுக்கு மரண அடி கொடுக்கப்படும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்ததை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய எல்லைகளான பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது. இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை வீசியும், ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பதற்றமான சூழலை அடுத்து பஞ்சாப்பில் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் 5 சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கல்லூரி மாணவர்கள்: நாங்கள் தங்கியிருந்த பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடந்தது. இதனையடுத்து, அந்த பகுதி முழுவதும் மின் தடை செய்யப்பட்டது. பின்னர், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றதால், அங்கிருந்து நாங்கள் புறப்பட்டு டெல்லி சென்றோம். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தோம். பல மாணவர்கள் தொடர்ந்து சென்னை திரும்பிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் 7 மாணவர்கள் இன்று பிற்பகலில் சென்னை வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.