நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற நேரம் தாண்டியும் வழக்குகளை விசாரிப்பார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காலை 10.30-க்கு தொடங்கும். ஆனால், ஜி.ஆர்.சுவாமிநாதன் பல நாட்கள் காலை 9 மணிக்கே விசாரணையை தொடங்கிவிடுவார்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பெஞ்சின் முக்கியமான நீதிபதி. 1968ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இவர், முதல் தலைமுறை வழக்கறிஞராக இருந்து உயர்ந்தவர். அவரது சாதனைகள் சட்டம், சமூக நீதி, மனித உரிமைகள் , நீதி நிர்வாகத்தில் பெரும் பங்களிப்பாக உள்ளன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை விசாரித்து முடித்த பெருமைக்குரியவராகி உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரிய வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விவாதங்களைக் கிளப்பி உள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றக்கோரி மக்களவை சபாநாயகரிடம் இம்பீச்மெண்ட் மனு அளித்துள்ளனர். இதற்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

1991-ல் சட்டப் பட்டம் பெற்று வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னையில் 13 ஆண்டுகள் பயிற்சி செய்தார். 1997-ல் புதுச்சேரியில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 2004-ல் மதுரை பெஞ்ச் உருவாகிய போது அங்கும் பயிற்சியை தொடர்ந்தார். 2014-ல் இந்தியாவின் உதவி சோலிசிட்டர் ஜெனரலாக மதுரை பெஞ்சிற்காக நியமனம் பெற்றார். இதில் பல பொது மற்றும் அரசு வழக்குகளை வென்றார்.

2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்வு பெற்றார். 2019-ல் நிரந்தர நீதிபதியாக உயர்ந்தார்.2030 மே 31 வரை பணி அவரது பணி உள்ளது. நீதிபதிகளின் செயல்பாடுகளை முன்வைத்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும் தனது பணிகளின் அறிக்கையை (self-appraisal card) வெளியிட்ட முதல் நீதிபதி. 7 ஆண்டுகளில் 64,798 வழக்குகளை தீர்ப்பளித்து (52,094 தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள்) இந்திய அளவில் சாதனை படைத்தார்.
அவர் அளித்த தீர்ப்புகள் சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தன. மாற்றுத்திறன் உள்ளவர்களின் உரிமைகள், அவர்களுக்கான சிறப்பு உரிமைகளை வலியுறுத்தும் தீர்ப்புகள். விலங்குகளின் உரிமைகள், விலங்குகளின் நலனைப் பாதுகாக்கும் தீர்ப்புகள். கைதிகளின் உரிமைகள், சிறைநிலை மோசடிகளுக்கு எதிரான தீர்ப்புகள். பேச்சுச்சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தீர்ப்புகள். திருநம்பிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் பெற உதவிய தீர்ப்பு. தாமிராபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு 5 ஆண்டு தடை விதித்த தீர்ப்பு. பரமக்குடி துப்பாக்கி சூட விசாரணையில் காவல்துறையை பாதுகாக்கும் வழக்கில் அரசு சார்பில் வாதாடினார்.
இந்த பரபரப்புக்கு இடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் கடந்த 9 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 1,20,426 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2017 முதல் 30.11.2025 வரை 2,138 ரிட் மேல்முறையீடு மனுக்கள், 3,751 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள், 41,920 ரிட் மனுக்கள், 434 ஆள்கொணர்வு மனுக்கள், 540 குற்றவியல் மேல்முறையீடு, 18,392 குற்றவியல் மனுக்கள், 780 குற்றவியல் சீராய்வு மனுக்கள் உட்பட 73,505 பிரதான மனுக்களை விசாரித்துள்ளார்.
46,921 இதர வகை மனுக்களை விசாரித்துள்ளார். மொத்தம் 1,20,426 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற நேரம் தாண்டியும் வழக்குகளை விசாரிப்பார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காலை 10.30-க்கு தொடங்கும். ஆனால், ஜி.ஆர்.சுவாமிநாதன் பல நாட்கள் காலை 9 மணிக்கே விசாரணையை தொடங்கிவிடுவார்’’ எனக்கூறுகின்றனர்.

