- Home
- Tamil Nadu News
- ஊட்டி, கொடைக்கானல், மூணார், குற்றாலம் டூர் பிளான் பண்றீங்களா.? ஜாக்பாட் சலுகையோடு TTDC சூப்பர் அறிவிப்பு
ஊட்டி, கொடைக்கானல், மூணார், குற்றாலம் டூர் பிளான் பண்றீங்களா.? ஜாக்பாட் சலுகையோடு TTDC சூப்பர் அறிவிப்பு
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், மூணார் உள்ளிட்ட இடங்களுக்கு சலுகை கட்டணத்தில் சுற்றுலா பயணம் செல்ல வாய்ப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூன்று நாட்கள் சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது.

கொளுத்தும் வெயில்- 3 நாள் சுற்றுலா திட்டம்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்ல பொதுமக்கள் திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் எப்படி செல்வது, எங்கு தங்குவது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களுக்காக சலுகை கட்டணத்தில் ஊட்டி, கொடைக்கானல், மூணார். பெங்களூர், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு டூர் அழைத்து செல்லப்படவுள்ளனர். இது தொடர்பாக சுற்றுலா வளர்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோடைக்காலத்தை முன்னிட்டு, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர் மற்றும் மூணார் உள்ளிட்ட மலைவாழிடங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களுக்கு மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயணத் திட்டங்கள் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களது கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு முன்பதிவுகள் நடைபெற்று வருகிறது.
ஊட்டிக்கு சுற்றுலா திட்டம்
மேலும் இக்கோடைக்கால சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கீழ்க்கண்ட சிறப்பு சுற்றுலாக்கள் ஏப்ரல் 2025 முதல் ஜீன் 2025 வரை இயக்கப்படுகிறது. 3 நாட்கள் ஊட்டி சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு வந்தடையும்.
3 நாட்கள் ஊட்டி சுற்றுலா பயணத்தில் தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி தாவரவியல் பூங்கா (பொட்டானிக்கல் கார்டன்), ஊட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு குழாமில் படகு சவாரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணம்
3 நாட்கள் கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு வந்தடையும். 3 நாட்கள் கொடைக்கானல் சுற்றுலா பயணத்தில் கொடைக்கானல், தூண் பாறை, பசுமை சமவெளி, கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகுகுழாமில் படகு சவாரி, வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஏற்காடு- ஒகேனக்கல் சுற்றுலா
3 நாட்கள் ஏற்காடு – ஒகேனக்கல் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு வந்தடையும். 3 நாட்கள் ஏற்காடு – ஒகேனக்கல் சுற்றுலா பயணத்தில் ஏற்காடு, ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பகோடா பாயிண்ட், ரோஸ் கார்டன், ஏற்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகுகுழாமில் படகு சவாரி, ஒகேனக்கல் – நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மைசூர் – பெங்களூர் சுற்றுலா திட்டம்
3 நாட்கள் மைசூர் – பெங்களூர் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு வந்தடையும். 3 நாட்கள் மைசூர் – பெங்களூர் சுற்றுலா பயணத்தில் சாமுண்டீஸ்வரி கோயில், நந்தி, மைசூர் அரண்மனை, பிருந்தாவனம் கார்டன், பெங்களூர் - ஶ்ரீரங்கப்பட்டினம், திப்பு கோடைக்கால அரண்மனை, லால்பாக் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
3 நாட்கள் குற்றாலம் சுற்றுலா திட்டம்
3 நாட்கள் குற்றாலம் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு வந்தடையும். 3 நாட்கள் குற்றாலம் சுற்றுலா பயணத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி, தென்காசி, ஶ்ரீவில்லிப்புத்தூர், மதுரை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மூணார் சுற்றுலா திட்டங்கள்
3 நாட்கள் மூணார் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு வந்தடையும். 3 நாட்கள் மூணார் சுற்றுலா பயணத்தில் மூணார் மறையூரில் புத்துணர்ச்சி பெறுதல், இரவிக்குளம் வனவிலங்கு சரணாலயம், பிளாஸம் பார்க் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அந்த வகையில் தனி அறையோடு பெரியவர்கள், இருவர் பகிரும் அறை, சிறுவர்களுக்கான அறை என தனித்தனி கட்டணம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 8500 ரூபாய் இருந்து 6800 ரூபாய் வரை வசூல் செல்லப்படுகிறது.
TTDC சலுகை கட்டணத்தில் சுற்றுலா
இத்தொகுப்பு சுற்றுலாக்களில் தங்கும் வசதி மற்றும் 6 வேளை உணவு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிற்றுந்து சொகுசு பேருந்துகளை கொண்டு இச்சுற்றுலாக்களை இயக்கி வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மற்ற பயணத்திட்டங்களுக்கு www.ttdconline.com என்ற இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

