- Home
- Politics
- புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
வலிமையான திமுக கூட்டணியை தோற்கடிக்க ஒரு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி நல்லது என விஜயின் மனது மாறலாம். கொஞ்சம் காத்திருக்கலாம். அதுவரை அட்டாக் செய்ய வேண்டாம் என ஒரு பெரிய கணக்கு போட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி

இரண்டில் ஒன்று மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்...
அதிமுகவை கைப்பற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரூட் எடுத்துக்கொண்டு இருக்க, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரட்டை சவால்களை எதிர்க்கொண்டு வருகிறார். ஒன்று அதிமுகவை முழுமையாக தன்னுடைய கண்ட்ரோலில் கொண்டு வரவேண்டும். அதை சுற்றி இனிமேல் பிரச்சனை வரக்கூடாது. மற்றொன்று 2026-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும். இரண்டில் ஒன்று மிஸ் ஆனாலும் அவ்வளவுதான். அரசியலில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
ஆகையால் ஒவ்வொரு நகர்வையும் இன்னும் மிகக் கவனத்தோடு எடுத்து வைத்துக் கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவரது அதிதீவிரமான ஆதரவாளர்கள். ஆனாலும், அடுத்தடுத்து நிறைய சேதாரங்களை மாதம்தோறும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், விஜயின் தவெக சென்றார். போனதோடு மட்டும் நிற்காமல் முன்னாள் அமைச்சர்கள் நிறைய பேருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். தவெக பக்கம் செல்ல உள்ளதாக பட்டாசு கொளுத்தி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அதிமுக ஸ்டைலில் பதிலடி கொடுக்க வேண்டும். அமைதியாக இருக்க கூடாது என்று இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.
தடுத்தாடும் எடப்பாடி பழனிசாமி
கோபியிலிருந்து அந்த இரண்டாம் கட்ட பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. அங்கே எங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார். மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறோம் என வாக்குறுதியும் கொடுத்து இருக்கிறார். அதேபோல அதிமுகவில் இருந்து கட்சி தாவ நினைக்கும் நிர்வாகிகளை தனது நம்பிக்கையானவர்கள் மூலமாக சரி கட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கியமானவர்கள் மூலமாக ‘‘நீங்க அவங்கள அழைச்சு பேசுங்க. அவங்களுக்கு வேண்டியத நம்ம செஞ்சு கொடுத்துடுவோம்’’ என உத்தரவாதமும் கொடுத்து வருகிறார்.
இதில் தான் புதிதாக ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்காக அவர்களிடம் பேசுகிற அந்த டீமோ சில முக்கியமான முன்னாள் அமைச்சர்கள், ஊசலாட்ட மனநிலையில் இருப்பவர்களிடம் பேசி வருகிறார்கள். அவர்கள், ‘‘இங்கே நம்ம கட்சியில பிரச்சனைகள் இல்லாமல் இல்ல. அரசியல்ல மேல வர விட மாட்டாங்க. இப்படி பல பிரச்சினைகள் இருக்கும். எல்லா கட்சியிலும் இது இருக்கு. புதுசா வந்திருக்கிற பக்கம் போனால் ஜெயிச்சிடலாம். நல்ல பதவி கிடைக்கும்னு நம்புறீங்க. ரைட்டு. ஆனால், புதுசா வந்திருக்கிற கட்சி 234 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக தேர்தல் செலவு செய்ய முடியுமா?
இங்கிருந்து புதுக்கட்சிக்கு செல்லும் அந்த முக்கியமானவங்க தலையில் செலவுகளை கட்டிவிட்டால் எப்படி சமாளிப்பீங்க? அப்படியே அதெல்லாம் மீறி செலவு செஞ்சாலும் நிச்சயமாக 100% வெற்றி என்று சொல்லிட முடியுமா? யோசித்து பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லி அந்த இடத்தில் தட்டி வைத்து வருகிறார்கள்.
வலுவான கூட்டணியை அமைத்து விட்டால் வெற்றி
அதே மாதிரி அச்சு பிசகாமல் அப்படியே போய் பேசிக்கொண்டு வருகிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். அதை உள்வாங்கிக் கொள்ளும் சில முன்னாள் அமைச்சர்கள் அப்படியே ஜெர்க் ஆகி வருகிறார்களாம். இன்னொரு விஷயத்தையும் அந்த இடத்தில் கோடிட்டு காட்டுகிறார்கள். சிலர் தவெக வேண்டாம். ஆளுங்கட்சியான திமுக ரூட் எடுக்கலாம் என நினைப்பவர்களிடம், முன்னமாதிரி எல்லாம் இப்போ திமுகவில் இல்லை. நம்ம கட்சியில் இருந்து போகிறவர்களுக்கு உடனே அமைச்சர் பதவி கிடைக்கும், முக்கிய பதவி கிடைக்கும்னு நினைக்காதீங்க. அங்கே இப்போ போன முன்னாள் அமைச்சர்களான அன்வர் ராஜா, எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அவர்களெல்லாம் எப்படி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? பத்தோடு பதினொன்றாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். பெரிய முக்கியத்துவத்தை அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் இங்கே இருந்தோம் என்றால் முழுமையான அடையாளம் கிடைக்கும். மரியாதையும் கிடைக்கும். தேர்தல் நேரத்தில் நம்மால் சாதிக்க முடியும்’’ என உற்சாகப்படுத்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி டீம்.
ஒவ்வொரு தொகுதிக்கும் குறைவில்லாமல் வைட்டமின் ‘ப’ 12 சி உண்டு. 12 முதல் 15சி வரை கொடுப்பதற்கு ரெடி என உத்தரவாதங்களும் கொடுத்து வருகிறது அதிமுக தலைமை. இப்படி கவனித்துக் கொள்கிறோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லும்போது வேற என்ன? இறங்கி வேலை பார்க்கலாம் என அவர்கள் நம்பிக்கை அளிப்பதால் வேறு கட்சிக்கு தாவும் எண்ணத்தில் இருக்கும் நிர்வாகிகளை தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில் இன்னொரு புறம் பாமக தலைவர் அன்புமணி டீம் சமீபத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிலும் சில பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஒன்று சேர்ந்த பாமகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என இரு தரப்பிலும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது அதிமுக. தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுகவின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்கள். இப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்து விட்டால் வெற்றி என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
விஜயின் மனது மாறலாம்...
அதன் தொடர்ச்சியாகவே விஜயின் தவெகவை இன்னும் அட்டாக் செய்யாமலே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தவெகவை பொறுத்த வரை காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என முழுமையாக நம்பிக்கொண்டு இருந்தது. ஆனால் பீகார் படுதோலிக்கு பிறகு நிலவரம் மாறிவிட்டது. காங்கிரஸும் திமுக கூட்டணிதான் என அந்தப் பக்கம் மொத்தமாக மறுபடியும் சரண்டர் ஆகி விட்டது. இப்போது தவெகவுக்காகன அந்த கேட் இழுத்து மூடப்பட்டு விட்டது. இன்னொரு புறம் அமுமுக டிடிவி.தினகரன், ஓபிஎஸ் டீம் இப்போது புது கட்சி இல்லை என்று சொன்னாலும் எப்படியோ அவர்கள் பாஜக ரூட்டில் என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து எந்த விதமான எதிர்ப்பும் எடப்பாடிக்கு இல்லை. வலுவான மூன்றாவது கூட்டணியை அமைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் கூப்பிட்டு ஓபிஎஸிடம் பேசி இருக்கிறார். ஒற்றுமையான அதிமுக என்கிற அதே விஷயத்துக்கு மறுபடியும் திரும்பி இருக்கிறார் ஓபிஎஸ்.அதில் சில எடப்பாடி பழனிசாமிக்கான கணக்கில் லாபம் தான். அவர்கள் தனி ரூட் எடுத்து விட்டதால் அதிமுகவை கைப்பற்ற அவர்கள் முயற்சி செய்ய முடியாது. தனிக்கட்சி ஆரம்பித்து ஓபிஎஸ் செல்கிற போது என்.டி.ஏ கூட்டணிக்குள்தான் அவருக்கு சீட் ஒதுக்கப்படும். அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்கிற அந்த பிரச்சனை எல்லாமே இதன் மூலமாக ஒன்றும் இல்லாமல் போய்விடும் என கணக்குப் போடுகிறார் எடப்பாடி.
இதை கடந்து மிக மிக முக்கியமாக அதிமுக தவெகவை ஒரு பக்கம் கூட்டணிக்கு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. தவெகவும் அதிமுகவை எதிர்பாத்துக் கொண்டுதான் இருக்கிறது. வலிமையான திமுக கூட்டணியை தோற்கடிக்க ஒரு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி நல்லது என விஜயின் மனது மாறலாம். கொஞ்சம் காத்திருக்கலாம். அதுவரை அட்டாக் செய்ய வேண்டாம் என ஒரு பெரிய கணக்கு போட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ என்கிறார்கள் அவருடன் நெருக்கமாக இருக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்.
