என் காலைப் பிடித்து கதறினர் அன்புமணி, சௌமியா! ராமதாஸ் அதிர்ச்சி தகவல்!
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், கூட்டணி முடிவுகளில் தலையிட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது பனையூரில் அலுவலகம் திறந்து இருக்கிறேன் என தொலைபேசி எண்ணை தந்து, நீங்கள் இனி என்னை அங்கு வந்து பார்க்கலாம் என அன்புமணி சொன்னது சரியான செயலா? நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? அழகான, ஆள் உயர கட்சியான பாமகவை ஒரு நொடியில் உடைத்தது யார்?
கட்சி வளர்ச்சிக்கு இடையூறு
கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னது போல கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி கலங்கம் ஏற்படுத்தி விட்டார். எதிர்மறையாளர்களால் எத்தனையோ விதி சொற்களையும் ஏளனங்களையும் இந்த உவமை ஜனங்களுக்காக தாங்கிக் கொண்டவன் நான். ஆனால் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன். அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார்.
தமிழ் குமரனுக்கு நியமனத்துக்கு அன்புமணி எதிர்ப்பு
பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள சொன்னேன். தமிழ் குமரனுக்கு நியமன கடிதம் வழங்கினேன். அதை உடனே கிழித்து போட்டுவிட்டு, பதவியை ராஜினாமா செய் என அன்புமணி தொலைபேசியில் கூறியுள்ளார். கட்சியின் பொதுகுழுவில் பங்கேற்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த தமிழ் குமரனை, அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என எனக்கு அலைபேசியில் கூப்பிட்டு அன்புமணி பேசினார். இதை கேட்டு அந்த குடும்பம் எவ்வளவு கலங்கி அவமானப்பட்டு இருக்கும்? மேடையில் அல்ல, எதிர் வரிசையில் ஒரு ஓரமாக தமிழ் குமரனை அமர வைக்க கூட அன்புமணி அனுமதிக்கவில்லை.
காலைப் பிடித்து அழுதனர்
2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமி இடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணி தான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர் என ராமதாஸ் கூறினார். இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. அதிமுக-பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்கக்கூடும். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார். கூட்டணிக்கான எல்லா ஏற்பாட்டையும் சௌமியாவே செய்துவிட்டார். மறுநாள் காலை வாசலில் பாரத் மாதா கி ஜே என கோஷம் கேட்கிறது. இது அனைத்தும் எனக்கு தெரியாமலேயே நடந்தது.
அன்புமணிக்கு பட்டாபிஷேகம்
பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியை கூட நீக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வந்து சொன்னார். இதை ஜி.கே.மணியிடம் சொன்னேன். பின்னர் ஒன்றரை மாதம் கழித்து அன்புமணிக்கு பட்டாபிஷேகம் நடத்தினேன். பாமக மூத்த நிர்வாகிகளை அன்புமணி மரியாதை குறைவாகவே நடத்தி வந்தார். குறிப்பாக மறைந்த காடுவெட்டி குருவை கூட அவர் உரிய மரியாதை உடன் நடத்தவில்லை என ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

