- Home
- Tamil Nadu News
- ஆணவப் படு**லை செய்யப்பட்ட கவின் வீட்டில் முகாமிடும் அரசியல் தலைவர்கள் - கனிமொழி, நயினார் விசிட்
ஆணவப் படு**லை செய்யப்பட்ட கவின் வீட்டில் முகாமிடும் அரசியல் தலைவர்கள் - கனிமொழி, நயினார் விசிட்
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு எம்.பி. கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின் செல்வணேஷ் என்ற மென்பொருள் பொறியாளர் தனது பள்ளித் தோழியும், சித்த மருத்துவருமான இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த கவின் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடியே தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை உடல்நிலை சரியில்லாத தனது தாத்தாவை அழைத்துக் கொண்ட திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
மென்பொறியாளர் படுகொலை
அதே மருத்துவமனையில் தான் கவினின் காதலியும் பணியாற்றி வந்துள்ளார். கவினின் வருகையை அறிந்த இளம் பெண்ணின் சகோதரரான சுர்ஜித் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு நின்றுகொண்டிருந்த கவினை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்ட சுர்ஜித், தனது வீட்டின் அருகே அழைத்துச் சென்று கவினை வெட்டி படுகொலை செய்துள்ளார்.
சுர்ஜித்தின் தந்தை கைது
சுர்ஜித்தின் தந்தை, சரவணன், தாய் என இருவரும் காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், இவர்களின் உடந்தையுடன் தான் இந்த ஆணவப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கவினின் உடல் தற்போது வரை உறவினர்களால் பெறப்படாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கவினின் உடலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவினின் வீட்டிற்கு நேரில் சென்று தங்களது ஆறுதலைத் தெரிவித்தனர்.

