- Home
- Tamil Nadu News
- டோட்டலாக மாறும் டாஸ்மாக் கடைகள்! சூப்பர் அறிவிப்பால் குஷியில் துள்ளி குதிக்கும் குடிமகன்கள்!
டோட்டலாக மாறும் டாஸ்மாக் கடைகள்! சூப்பர் அறிவிப்பால் குஷியில் துள்ளி குதிக்கும் குடிமகன்கள்!
டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, தமிழக அரசு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பார்கோடு ஸ்கேன் மற்றும் டைனமிக் க்யூஆர் கோடு மூலம் பில் வழங்கப்படும்.

டாஸ்டாக் கடைகள்
தமிழகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட டாஸ்டாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனை அரசே எடுத்து நடத்தி வருகிறது. குறிப்பாக வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக இருந்து வருகிறது. 2024-2025ம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி 2023 - 2024 நிதியாண்டை விட 2,489 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் எம்.ஆர்.பி விலையை விட ரூ.10 முதல் 50 ரூபாய் வரை அதிகம் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அவ்வப்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் குடிமகன்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டது.
பார் கோடு ஸ்கேன்
இதனையடுத்து மதுபான பாட்டிலை பார் கோடு ஸ்கேன் செய்து பில் வழங்கி விற்பனை செய்யும் முயற்சியானது முதலில் ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மதுபானத்திற்கு பில் கொடுக்கும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எம்.ஆர்.பி விலை மது வாங்க டைனமிக் க்யூஆர்
அதன்படி சென்னையில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்.ஆர்.பி விலை மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. டாஸ்மாக்கில் விற்பனையாளர்கள் அதிக விலை வசூலிப்பதை தடுக்க ஸ்கேனர்களை பிஓஎஸ் இயந்திரங்களுடன் இணைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
அனைத்து கடைகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எம்.ஆர்.பி. மட்டுமே வசூலிக்க வேண்டும். முதல்கட்டமாக நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 70 நிலையங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அடுத்தகட்டமாக, ஒரு வாரத்தில் சென்னை மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து 90 கடைகளுக்கும் இந்த இணைப்பு விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

