- Home
- Tamil Nadu News
- ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மர்ம கும்பல், வெடிகுண்டு தயாரித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவராகவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர், மாநில நிர்வாக குழு உறுப்பினர், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவர் கடந்த 5ம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ம.க.ஸ்டாலின் மீது வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்றனர். இதில் இருந்து தப்பித்த அவர் இதனை தடுக்க முயன்ற இளையராஜா, அருண் ஆகியோர் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்தனர். ஆனால், ம.க.ஸ்டாலின் எப்படியோ சிறிய காயங்கள் இன்றி அங்கிருந்து தப்பித்தார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் அருகே உடையாளுர் அண்ணாநகரை சேர்ந்த லட்சுமணன்(33), ஸ்டாலினை கொலை செய்ய வந்த மர்மகும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார், லட்சுமணனிடம் விசாரிக்க உடையாளூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு லட்சுமணன் இல்லை. இதனால் வீட்டிலிருந்த அவரது அண்ணன் ராமன்(35) மற்றும் லட்சுமணனின் மனைவி மதனா(23) ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் லட்சுமணன் வீடு திரும்பிய நிலையில் மனைவி மற்றும் அண்ணனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது தெரியவந்தது. லட்சுமணன் வீட்டிற்கு வந்துள்ள தகவல் போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு லட்சுமணன் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக மருதுபாண்டி, மகேஷ் என்ற இருவரை சேலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகே உண்மை காரணம் தெரியவரும்.

