விடிய விடிய விடாமல் ஊத்தும் கனமழை! இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? வெளியான தகவல்
தென்மேற்கு பருவமழை விலகும் நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுச்சேரி-காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் நாளை தொடங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
பள்ளி மாணவர்கள்
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் இரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், போரூர், ராமாபுரம், தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகுமோ என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தாலும் இதுவரை எந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
22 மாவட்டங்களில் மழை வார்னிங்
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.

