- Home
- Tamil Nadu News
- கோர்ட் கொடுத்த கிரீன் சிக்னல்! களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை! அலறும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள்!
கோர்ட் கொடுத்த கிரீன் சிக்னல்! களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை! அலறும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள்!
டாஸ்மாக் மது விற்பனையில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. உயர் நீதிமன்றம் சோதனைக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

டாஸ்மாக் முறைகேடு
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கியது.
தமிழக அரசின் மனு தள்ளுபடி
அதில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை சோதனை
இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

