- Home
- Tamil Nadu News
- வரவன் போறவன் எல்லாம் அதிமுக தலைவர்கள் படத்தை பயன்படுத்தினால் எப்படி? விஜய்க்கு எதிராக கொதித்த இபிஎஸ்!
வரவன் போறவன் எல்லாம் அதிமுக தலைவர்கள் படத்தை பயன்படுத்தினால் எப்படி? விஜய்க்கு எதிராக கொதித்த இபிஎஸ்!
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டு மேடையில் அண்ணா, எம்ஜிஆர், விஜய் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் முதல் மாநாட்டை 2024ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு இரண்டாது மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இன்று நடைபெற உள்ளது. இதற்காக நேற்று இரவு முதலே மாநாட்டு அரங்கத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மாநாடு மேடையில் பிரம்மாண்ட முறையில் அண்ணா, எம்ஜிஆர் நடுவில் விஜய் இருப்பது போல் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பேச்சு பொருளாக மாறி உள்ளது.
இந்நிலையில் புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் அதிமுக தலைவர்களின் படத்தை பயன்படுத்துகிறார்கள் தவெக தலைவர் விஜயை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகையில்: ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். திமுக என்பது கார்பரேட் கம்பெனியாக மாறியுள்ளது. திமுக கட்சி அல்ல கார்பரேட் கம்பெனி. உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை தொடங்கி மக்களைத் தந்திரமாக ஆசைகளை காட்டி ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்கான அரங்கேற்றம் நடக்கிறது.
திமுக குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அதிமுக மக்களுக்காக பாடுபடும் இயக்கம். இதுதான் வித்தியாசம். அதிமுக ஆட்சி இருந்தபோது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. தினந்தோறும் பத்திரிகை ஊடகங்களிலும் தங்கம் விலைகள் கூறுவது போல் கொலை நிலவரங்கள் பெரும்பாலும் குறிப்பிட்டு வருகின்றன. இதுபோல் இருக்கும் மோசமான ஆட்சி தொடர வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல் 2026ல் நடைபெறுகிறது. மக்களின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது. திமுக என்ற கட்சி இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது. உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை என விமர்சித்துள்ளார்.
இன்றைக்கு புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் அதிமுக தலைவர்களின் படத்தை பயன்படுத்துகிறார்கள் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் அப்படி நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர் என தெரிவித்தார்.

