அடுத்த 3 மணிநேரத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

கத்திரி வெயில் தொடங்கியது முதலே மழை
Tamilnadu Rain: தமிழகத்தில் கோடை கொளுத்தி வந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி முதல் தொடங்கியது. இதனால் வெயில் எப்படி சுட்டெரிக்கப்போகுதோ என்ற பீதியில் பொதுமக்கள் இருந்து வந்தனர். ஆனால், கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதேபோல தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

