கோழிக்கோட்டில் நடந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியது, பல மாதங்களுக்குப் பிறகு இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Police complaint against Prakash Raj : நடிகர் பிரகாஷ் ராஜ், இந்த வருஷம் ஜனவரியில் கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழாவில் (KLF) கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசிய ஒரு பகுதி, பல மாதங்கள் கழித்து இப்போது பெரிய சர்ச்சையாகியுள்ளது. அவருடைய பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பலர் பிரகாஷ் ராஜ் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அமித் சச்தேவா, பிரகாஷ் ராஜ் மீது டெல்லி போலீஸில் புகார் அளித்திருப்பதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான அந்தப் பேச்சில் பிரகாஷ் ராஜ் என்ன சொன்னார்?

"சமீபத்தில் குழந்தைகள் நடத்திய ஒரு நாடகத்தைப் பார்த்தேன். அவர்கள் ராமாயணத்தை மாற்றி எழுதியிருந்தார்கள்" என்று அவர் விவரிக்கத் தொடங்கினார். "அந்த நாடகத்தில், ராமர், லட்சுமணன், சீதை மூவரும் தென்னிந்தியாவுக்கு வருகிறார்கள். ராமர், லட்சுமணனை 'லக்கி' என்று கூப்பிடுகிறார். அங்கே ஒரு காடு இருப்பதை லட்சுமணன் சுட்டிக்காட்ட, 'அது காடு இல்லை, யாருடையதோ விவசாய நிலம்' என்கிறார் ராமர். அங்கு சாப்பிட பழங்கள் இருந்தன. 'இதை சாப்பிடுவது திருட்டாகுமா?' என லட்சுமணன் கேட்க, 'பசியோடு சாப்பிட்டால் அது திருட்டு இல்லை' என ராமர் பதில் சொல்கிறார். அவர்கள் பழங்களைச் சாப்பிடும்போது, ராவணனும் சூர்ப்பனகையும் அங்கு வருகிறார்கள். சூர்ப்பனகை கோபமாக, 'அண்ணா, யாரோ நம்ம பழங்களைச் சாப்பிடுகிறார்கள்' என்கிறாள். அதற்கு ராவணன், 'பசியால் சாப்பிடுகிறார்கள், அவர்கள் சாப்பிட்டு முடிக்கட்டும், பிறகு பேசலாம்' என சமாதானப்படுத்துகிறார்."

"ராவணனையும் சூர்ப்பனகையையும் பார்த்த ராமர், 'யாரோ பழங்குடியினர் வந்திருக்கிறார்கள்' என லட்சுமணனிடம் சொல்கிறார். ஆனால் ராவணன், 'இல்லை, நாங்கள் இந்த நிலத்தின் உரிமையாளர்கள்' என்கிறார். 'பழங்களைச் சாப்பிட்டதற்குப் பணம் கொடுக்க வேண்டும், எவ்வளவு விலை?' என்று ராமர் கேட்கிறார். அதற்கு சூர்ப்பனகை, '2000 டாலர் பிளஸ் ஜிஎஸ்டி' என்கிறாள். கையில் பணம் இல்லை என்று அவர்கள் சொன்னதால், தள்ளுபடி கொடுக்கச் சொல்லி ராவணன் சூர்ப்பனகையிடம் கூறுகிறார். அவளும் 20% தள்ளுபடி தருவதாகச் சொல்கிறாள். ஆனாலும் அவர்களிடம் பணம் இல்லை. அதனால் ராவணன், 'பரவாயில்லை, நீங்கள் சாப்பிட்ட பழங்களின் விதைகளை இங்கேயே விதைத்துவிட்டுப் போங்கள்' என்கிறார். கடைசியில், 'நான் வடக்கிலிருந்து வரும் ராமா. நான் தெற்கிலிருந்து வரும் ராவணா. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று சொல்லி அவர்கள் பிரிகிறார்கள்."

இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிரகாஷ் ராஜ், "அந்தக் குழந்தைகள் அரசியலைப் பேசுகிறார்கள். நீங்கள் இங்கே வந்து இந்தி பேசச் சொல்லி எங்களை வற்புறுத்தாதீர்கள். பதிலாக, மலையாளம் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இங்கு வேலை செய்ய வந்த மேனேஜராக இருந்தால், ஆபிஸில் பீஃப் சாப்பிடக் கூடாது என்று சொல்லாதீர்கள். நாங்கள் பீஃப் திருவிழா நடத்துவோம். ஒரே நாடு, ஒரே மதம் என்று சொல்லாதீர்கள். வெளியே போங்கள். இது எங்கள் மண். அதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள்" என்றும் பிரகாஷ் ராஜ் பேசியிருந்தார்.