நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி படுஜோராக நடைபெற்று வருகிறது.
Jana Nayagan Beat Leo : நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன், ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி உலகமெங்கும் திரைகாண உள்ளது. ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தை பற்றிய அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்றுகூட ஜன நாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள அப்பாடல், ரிலீஸ் ஆன உடனே சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவியது.
ஜன நாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், டிஜே அருணாச்சலம், மமிதா பைஜு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜன நாயகன் திரைப்படத்திற்கு வெளிநாடுகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் தற்போதே அங்கு முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்பதிவில் மாஸ் காட்டும் ஜன நாயகன்
அந்த வகையில் இங்கிலாந்தில் ஜன நாயகன் திரைப்படம் மாஸ் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற டிக்கெட் முன்பதிவில் சுமார் ரூ.1.3 கோடி வசூலாகி உள்ளதாம். அதுமட்டுமின்றி லியோ படத்தின் சாதனையையும் ஜன நாயகன் முறியடித்து இருக்கிறது. லியோ படத்திற்கு இங்கிலாந்தில் முதல் நாள் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ள ஜன நாயகன் தற்போது வரை இங்கிலாந்தில் 12 ஆயிரத்து 700 டிக்கெட்டுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம்.
இங்கிலாந்து மட்டுமின்றி ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஜன நாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் ஜன நாயகன் திரைப்படம் முதல் நாளே மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது. ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27-ந் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கு தளபதி திருவிழா என பெயரிட்டுள்ளனர்.


