‘தக் லைஃப்’ திரைப்படம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

James Vasanthan Reviewed Thug Life Movie

‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, நாசர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, வசூலிலும் கடும் சர்வை சந்தித்து வருகிறது. இரண்டு வாரங்களை கடந்த நிலையில் ரூ.50 கோடி கூட வசூலிக்க முடியாமல் படம் திணறி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் மொழி சர்ச்சை காரணமாக கன்னடத்தில் மட்டும் வெளியாகவில்லை. மற்ற நான்கு மொழியிலும் வெளியான போதிலும் ரூ.50 கோடி கூட வசூலிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் எழுந்த நெகட்டிவ் விமர்சனங்களே படம் தோல்வியடைய முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

‘தக் லைஃப்’ படம் குறித்து பதிவிட்ட ஜேம்ஸ் வசந்தன்

மேலும் படத்தின் திரைக்கதை சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. வளர்ப்பு தந்தையின் இரண்டாவது மனைவிக்காக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டமாக இந்த படத்தின் திரைக்கதை விளங்குகிறது. இது ரசிகர்கள் பலரையும் ரசிக்கவில்லை. மேலும் குடும்பமாக சென்று பார்க்கும் அளவிற்கு திரைக்கதை இல்லை என்று ரசிகர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் விரைவில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு படம் வெளியாகி மூன்று வாரத்திற்குப் பின்னரே படம் ஓடிடியில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் அடுத்த வாரத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படமும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பலரும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கூறி வரும் நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறியுள்ளார்.

ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “நேற்றிரவு 'Thug Life' படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஆனால் ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை. ஒரு underworld gangster படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே English மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம்; அல்லது ரசித்தது போல நடித்திருப்போம். ஒரு நல்ல படத்தின் அத்தனை அம்சங்களும் உயர்தரத்தில் இருந்தன. ஆழமான கதை, அட்டகாசமானத் திரைக்கதை, அசரவைக்கிற locations, அதை அருமையாகக் கண்முன் கொண்டுவந்த ஒளிப்பதிவு, சர்வதேச தரத்தில் பின்னணி இசை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்கள், அவர்களின் அடக்கமான நடிப்பு, அற்புதமான ஒலிக்கலவை, படத்தை விறுவிறுப்பாக்கிய படத்தொகுப்பு என எல்லாமே ஒருசேர அசத்திய கலவை. ஒரு காட்சிகூட சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வியப்பு!

மணிரத்னமும், கமலும் இந்தியாவுக்கு கிடைத்த வரம்

முடிவை பலவிதத்தில் சிந்தித்துப் பார்த்தேன். சிம்புவின் கதாபாத்திரம் இறக்காமல், கமல் கதாபாத்திரம் இறந்திருந்தால் எப்படியிருக்கும்? இரு கதாபாத்திரங்களும் இறந்து நாசர் கதாபாத்திரம் நிலைத்து நின்றால் எப்படியிருக்கும்? எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் சிறப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு உணர்வுகளோடு வெளியேறியிருப்போம், அவ்வளவுதான். இதுவரை இந்தப்படத்தைப் பார்க்காதவர்கள் போய்ப்பாருங்கள். சமூக ஊடகங்கள் அரசியலையும் கலையையும் போட்டுக் குழுப்பிக்கொள்கிற மலிவான காலகட்டத்தின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். மணிரத்னமும் கமல்ஹாசனும் ரஹ்மானும் ரவி K சந்திரனும் இந்தியாவுக்குக் கிடைத்த வரங்கள்.” எனக் கூறியுள்ளார்.