அமெரிக்க செனட் சபையில் செலவினங்கள் தொடர்பான மசோதா நிறைவேறாததால், அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர் மற்றும் பல சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க செனட் சபையில் செலவினங்கள் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாத காரணத்தினால், அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா "ஷட் டவுன்" ஆவது இதுவே முதல்முறையாகும். அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து பெடரல்) அரசு ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த நிதியாண்டிற்கான அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இடைக்கால நிதி மசோதாவுக்கு மேல்சபையான செனட்டில் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
நிதி மசோதா நிறைவேறாதது ஏன்?
செனட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில், நிதி மசோதாவை நிறைவேற்ற குறைந்தபட்சம் 60 வாக்குகள் தேவை. அதிபர் டொனால்டு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி மற்றும் சுயேச்சை எம்பிக்களின் ஆதரவுடன் 55 வாக்குகள் கிடைத்த போதிலும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்காததால், தேவையான 60 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் மசோதா தோல்வியடைந்தது.
அமெரிக்க அரசு முடக்கத்தின் விளைவுகள்
புதன்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும். விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம், பொருளாதார அறிக்கைகள் வெளியிடுவது தாமதமாகலாம், ஆராய்ச்சி மையங்கள் முதல் சிறு வணிகக் கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் மூடப்படும்.
ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு ஏஜெண்டுகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் (ATC) போன்ற அத்தியாவசியப் பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடருவார்கள். எனினும், முடக்கம் நீங்கும் வரை அவர்களுக்கு ஊதியம் கிடைக்காது. சமூக சேவை மற்றும் மருத்துவக் காப்பீட்டுச் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
கல்வித் துறை உட்பட அத்தியாவசியமற்ற துறைகளில் உள்ள பல ஆயிரம் ஊழியர்கள் தற்காலிக விடுப்பில் அனுப்பப்படுவார்கள். கல்வித் துறையில் மட்டும் சுமார் 90% ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
ஜனநாயகக் கட்சியின் நிபந்தனை
செலவினங்கள் குறித்து முடிவெடுக்க டிரம்ப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் முந்தைய நடைமுறையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிக்க குடியரசுக் கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
மேலும், ஏழை மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு மானியம் வழங்குவதற்கான சட்ட மசோதா இந்த ஆண்டுடன் முடிகிறது. இதை நீட்டிக்க ஜனநாயகக் கட்சி விரும்பும் நிலையில், அதை ஏற்க அதிபர் டிரம்ப் தயாராக இல்லாததுமே இந்த அரசியல் மோதலுக்கான பிரதானக் காரணங்களாக உள்ளன. இதற்கிடையில், பெடரல் அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அதிபர் டிரம்ப் எச்சரித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.


