இந்தியாவுடனான பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எந்த விரோதப் போக்கையும் தொடங்காது என்றும், ஆனால் பாகிஸ்தானைத் தூண்டினால் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவுடனான பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியா புதன்கிழமை நள்ளிரவு நடத்திய ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவரது அறிக்கை வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்:
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஆசிஃப், பாகிஸ்தான் எந்த விரோதப் போக்கையும் தொடங்காது என்றும், ஆனால் பாகிஸ்தானைத் தூண்டினால் பதிலடி கொடுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
"கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறிவருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், பதிலடி கொடுப்போம்," என்று ஆசிப் கூறினார். "இந்தியா தங்கள் நடவடிக்கையில் பின்வாங்கத் முடிவுசெய்தால், இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்." எனவும் கூறினார்.
பேச்சவார்த்தை சாத்தியமா?
இந்த கட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் குறித்தும் தன்னால் எதுவும் கூற முடியாது என ஆசிஃப் குறிப்பிட்டார்.
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்களில் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.


