ராமேஸ்வரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய தம்பதியை வழிமறித்த 4 போதை இளைஞர்கள், கணவரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புது துணிமணிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு பேருந்தில் இறங்கி தங்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தம்பதி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த 4 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கணவரை தாக்கி மரத்தில் கட்டி வைத்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். ஆனால், அந்த பகுதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. மேலும் போதையில் இருந்த இளைஞர்கள், அந்த பெண்ணை கதற கதற கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கணவர் அவ்வழியாக சென்றவர்களிடம் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து 4 பேரும் தப்பியோட முயன்றனர். ஆனால், பொதுமக்கள் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்ற மூவரும் அங்கிருந்து தப்பித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் இளைஞரை ஒப்படைத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற மூன்று பேரையும் தேடிவருகின்றனர்.


