தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசல் மற்றும் வெப்பம் காரணமாகப் பலர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலைமையைச் சமாளிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

கரூரில் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கரூர் அரசு மருத்துவமனையில் உச்சக்கட்டப் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விரைந்து வந்துள்ளார். அவர் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறி, நிலவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் (திமுக), முக்கியப் பிரமுகருமான செந்தில் பாலாஜியும் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

கலெக்டர் அவசர நடவடிக்கை:

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் வசதிகளை அவசரமாக ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர், கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து நிலைமையைப் பார்வையிட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. முதல்வரின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதச் சம்பவத்தால், கரூர் அரசியல் மற்றும் நிர்வாகத் தரப்பில் பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.