தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், மக்களிடம் கவனம் பெறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளன. அந்த வகையில் பாஜகவும் தமிழகத்தில் தங்கள்சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த மாதம் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா ராமேஸ்வரத்திலும், விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்து விழா நடத்தவும் இதில் பிரதமர் பங்கேற்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதில் பிரதமர் கலந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்துகொள்ள முடியாத பட்சத்தில் குறிப்பிட்ட சில விழாக்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான தேதி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை என்றாலும் அடுத்த சில தினங்களில் இது இறுதி செய்யப்படலாம்.