அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று திடீரென சந்தித்து பேசியது ஏன்? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது தேர்தல் தொகுதி பங்கீடு, பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரவும் நயினார் இபிஎஸ்ஸுடன் ஆலோசனை நடத்தி இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நயினார், ''மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன். இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி அவர்கள் மற்றும் ஜெயபிரகாஷ் அவர்கள் உடன் இருந்தனர்'' என்று கூறியிருந்தார்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது ஏன்? என்பது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அதிமுக பொதுக்குழு நேற்று நடந்தது. அந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக வாழ்த்து சொல்ல இபிஎஸ்ஸை சந்தித்தேன். இன்றைய சந்திப்பின்போது கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ ஏதும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது'' என்று தெரிவித்துளார்.