தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாபெரும் உணவுத் திருவிழா டிசம்பர் 21 முதல் 24 வரை நடைபெறுகிறது. இவ்விழாவில், 235க்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் மாவட்ட சிறப்பு உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தரமான உணவுகள், முன்னணி உணவகங்களின் உணவு வகைகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் அவற்றிற்கு இணையாக

சுவையும், தரமும் நிறைந்த உணவுகளை முறையான பயிற்சி பெற்று சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதால், சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா, 21.12.2025 முதல் 24.12.2025 வரை சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது. 

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை 21.12.2025 மாலை 04.00 மணியளவில், சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் துவக்கி வைத்து சிறப்பித்திட அன்புடன் இசைந்துள்ளார்கள். உணவுத் திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த அரியலூர் தோசை வகைகள், சென்னை Street Food, செங்கல்பட்டு காய்கறி தோசை, கருவாடு சூப், கோயம்புத்தூர் கொங்கு மட்டன் பிரியாணி, கடலூர் மீன் புட்டு, திண்டுக்கல் சிக்கன் பிரியாணி, தருமபுரி ராகி அதிரசம், ஈரோடு கோதுமை கீரை போண்டா, கள்ளக்குறிச்சி வரகு அரிசி பிரியாணி, காஞ்சிபுரம் கோவில் இட்லி, கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி உள்ளிட்டவைகள் அடங்கும்.

கிருஷ்ணகிரி பருப்பு அடை – காரச் சட்னி, மதுரை சிக்கன் பிரியாணி, பனங்குருத்து மில்க் ஷேக், மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டிணம் நாகூர் பிரியாணி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், நீலகிரி ராகி களி - அவரை குழம்பு (கோத்தர் உணவு), புதுக்கோட்டை கோதுமை பணியாரம், ராமநாதபுரம் மீன் உணவுகள், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, சேலம் முட்டை தட்டுவடை, சிவகங்கை நெய் சாதம், தென்காசி உளுத்தங்களி, தஞ்சாவூர் மட்டன் உணவுகள், திருவள்ளூர் நெய்தல் உணவுகள், திருவண்ணாமலை சிமிலி, தூத்துக்குடி இலங்கை யாழ் உணவுகள், திருநெல்வேலி நரிப்பயிறு பால், திருப்பத்தூர் ஆம்பூர் பிரியாணி, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், திருச்சி வரகு மட்டன் பிரியாணி, திருவாரூர் பனை உணவுகள், தேனி பால் கொழுக்கட்டை, வேலூர் தேங்காய் போளி, விழுப்புரம் சிறுதானிய சிறப்பு உணவுகள், விருதுநகர் புரோட்டா கடை உள்ளிட்ட 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிய முன்னெடுப்பாக பல்வேறு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட 12 அரங்குகளில் கடலூர் காய்கறிகள், செங்கல்பட்டு – கிருஷ்ணகிரி எண்ணை மற்றும் அடுப்பில்லா முறையில் (No Oil No Boil) தயாரித்த உணவுகள், காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், கன்னியாகுமரி பலதரப்பட்ட சிப்ஸ் வகைகள், பெரம்பலூர் முத்து சோளம், நாமக்கல் புரதச் சத்து நிறைந்த முட்டை உணவுகள், ராமநாதபுரம் பனை மதிப்புக் கூட்டுப் பொருட்கள், நீலகிரி பாரம்பரிய தேநீர், சேலம் மளிகைப் பொருட்கள், சிவகங்கை செட்டிநாட்டுத் தின்பண்டங்கள், திருவள்ளூர் 90களில் (90s Kids) பிரசித்திப் பெற்ற 30 வகையான தின்பண்டங்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. துவக்க நாளான 21.12.2025 அன்று மட்டும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி நடைபெறும் உணவுத் திருவிழா, 22.12.2025 முதல் 24.12.2025 வரை மதியம் 12.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறும்.

இந்த உணவுத் திருவிழாவில் மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அனுமதி இலவசம். உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தந்து, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் சத்தான, சுவையான, ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்திடவும், வாங்கிச் சென்றிடவும் அன்புடன் அழைக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.