india and Pakistan teams play cricket its on bcci Pakistan Cricket Board

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் விவகாரத்தில் பிசிசிஐதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், அத்துமீறிய தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இந்தியா தவிர்த்து வருகிறது. 

எனினும், 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஐசிசி போட்டிகளில் இரு நாடுகளும் மோதிக் கொள்கின்றன.

இந்நிலையில், இருதரப்பு கிரிக்கெட் ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாகக் கூறி பிசிசிஐயிடம் ரூ.464.9 கோடி இழப்பீடு கோரி ஐசிசியிடம் பாகிஸ்தான் முறையிட்டுள்ளது. அதுதொடர்பாக 3 நபர் குழு வரும் அக்டோபரில் விசாரிக்க உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "முதலாவதாக, துணைக் கண்டத்திலுள்ள ரசிகர்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் இணைந்து விளையாட வேண்டும். அடுத்ததாக, இதுதொடர்பாக பிசிசிஐ தான் இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விவாதிக்க ஏதுமில்லை.

விரைவாகவோ அல்லது தாமதமாகவோ இரு நாடுகளும் மீண்டும் இணைந்து கிரிக்கெட் விளையாடும் என்று நம்புகிறோம். இந்திய அணியின் எதிர்கால கிரிக்கெட் சுற்றுப் பயண திட்டத்தில், பாகிஸ்தான் தொடருக்கு கால ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்த விவகாரத்தில் தீர்ப்பாயத்தின் முடிவையே நாங்கள் சார்ந்திருக்கிறோம். அதன் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் பட்சத்தில், கிரிக்கெட் சுற்றுப் பயணத் திட்டம் அதற்கேற்றாற்போல மாற்றியமைக்கப்படும். 

பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய ஊடகங்கள் உரிய அழுத்தம் தராதது ஆச்சர்யமளிக்கிறது" என்று அவர் கூறினார்.