சுப்மன் கில் இரட்டை சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
Indian Team Strong Position In 2nd Test Against England: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டை இழந்து 310 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடந்த நிலையில், இருவருமே அட்டகாசமாக விளையாடினார்கள்.
இந்திய அணியை மீட்ட சுப்மன் கில், ஜடேஜா
ஜடேஜா ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபகக்கம் சுப்மன் கில் ஏதுவான பந்துகளை எல்லைகோட்டுக்கு விரட்டி அடித்தார். ஒரு கட்டத்தில் இந்தியா 211/5 என தடுமாறிய நிலையில் ஜடேஜாவும், கில்லும் சேர்ந்து 200க்கும் அதிகமான ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நன்றாக விளையாடிய ஜடேஜா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 137 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்து ஜோஷ் டங்கின் பவுன்ஸ் பந்தில் கேட்ச் ஆனார்.
சுப்மன் கில் இரட்டை சதம்
ஆனால் மறுபக்கம் நேர்த்தியாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் இங்கிலாந்தில் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இரட்டை சதம் அடித்த பிறகும் தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை விரட்டியடித்தார் சுப்மன் கில். அவருக்கு வாஷிங்டன் சுந்தர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 300 ரன்கள் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 387 பந்துகளில் 30 பவுண்டரி, 3 சிக்சருடன் 269 ரன்கள் எடுத்த சுப்மன் கில் ஜோஷ் டங் பந்தில் போப்பிடம் கேட்ச் ஆனார்.
இந்திய அணி 587 ரன்களுக்கு ஆல் அவுட்
இதனைத் தொடர்ந்து ஓரளவு சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் (42 ரன்) ஜோ ரூட் பந்தில் போல்டானார். பின்வரிசை வீரர்கள் ஆகாஷ் தீப் (6), முகமது சிராஜ் (8) விரைவில் வெளியேறியதால் இந்திய அணி 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷிர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்து திணறல்
பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் டெஸ்ட்டில் அதிரடி சதம் விளாசி மேட்ச் வின்னராக ஜொலித்த பென் டக்கெட் ரன் ஏதும் எடுக்காமல் ஆகாஷ் தீப் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் ஆனார். அதற்கு அடுத்த பந்தில் ஆலி போப்பும் டக் அவுட்டில் நடையை கட்டினார். தொடர்ந்து சாக் க்ரொலியும் (19 ரன்) சிராஜ் பந்தில் கருண் நாயரிடம் கேடச் ஆனதால் இங்கிலாந்து அணி 25/3 என தடுமாறியது.
இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு
இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும், ஹாரி ப்ரூக்கும் சிறப்பாக விளையாடி அணியை அதலபாதாளத்தில் இருந்து மீட்டனர். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் 30 ரன்களுடனும், ஜோ ரூட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி இந்தியாவை விட 510 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்த டெஸ்ட்டில் இந்தியாவின் கையே ஒங்கியுள்ளது. நாளை இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தால் வெற்றியை தட்டிப் பறிக்க அதிக வாய்ப்புள்ளது.


