சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) இறுதிப் போட்டியில் ஹரியானாவை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜார்க்கண்ட் அணி தனது முதல் பட்டத்தை வென்றது. கேப்டன் இஷான் கிஷன் மின்னல் வேக சதம் விளாசினார்.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) இறுதிப் போட்டியில், ஹரியானாவை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜார்க்கண்ட் அணி தனது முதல் பட்டத்தை வென்றது. ஜார்க்கண்ட் கேப்டன் இஷான் கிஷனின் வரலாற்றுச் சிறப்புமிக்க சதம் அடித்து அணி கோப்பை வெல்ல உதவினார்.
இஷான் கிஷன் அதிரடி ஆட்டம்
இந்த போட்டியில் ஹரியானா கேப்டன் அங்கித் குமார் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், ஜார்க்கண்ட் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே விராட் சிங்கை அன்ஷுல் கம்போஜ் ஆட்டமிழக்கச் செய்தார். இருப்பினும், இஷான் கிஷன் மற்றும் குமார் குஷாக்ரா இடையேயான பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
45 பந்துகளில் சதம் அடித்த இஷான் கிஷன்
கடைசியாக நவம்பர் 2023-ல் சர்வதேசப் போட்டியில் விளையாடிய கிஷன், இந்த ஆட்டத்தின் மூலம் தேசிய தேர்வாளர்களுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளார். அவர் 45 பந்துகளில் சதம் அடித்து, 101 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது இன்னிங்ஸில் 10 சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளை விளாசி, ஹரியானா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சிதறடித்தார். அவருக்கு துணையாக ஆடிய குஷாக்ரா, 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார்.
ஒரே போட்டியில் பல சாதனை
இந்த சதத்தின் மூலம், SMAT இறுதிப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கிஷன் பெற்றார். இதற்கு முன்பு, பஞ்சாப்பின் அமோல்பிரீத் சிங் SMAT 2023-24-ல் மொஹாலியில் பரோடாவுக்கு எதிராக 113 இந்த சாதனையைச் செய்திருந்தார். மேலும், இந்தச் சாதனையைச் செய்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார். SMAT இறுதிப் போட்டி இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் படைத்தார்.
முதல் கோப்பையை வென்ற ஜார்க்கண்ட்
இறுதிக் கட்டத்தில் அனுகுல் ராய் (20 பந்துகளில் 40) மற்றும் ராபின் மின்ஸ் (14 பந்துகளில் 31 ரன்) ஆகியோரின் அதிரடியால் ஜார்க்கண்ட் அணி 262/3 என்ற சாதனை ஸ்கோரை எட்டியது. 264 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய ஹரியானா 193 ரன்கள் மட்டுமே எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், ஜார்க்கண்ட் அணி முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்று இந்திய உள்நாட்டு சாம்பியன்களின் எலைட் பட்டியலில் இணைந்துள்ளது.


