சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதமும், சர்பராஸ் கான் அதிரடி அரை சதமும் விளாசி கவுதம் கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) 2025 தொடரில் இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான சதம் அடித்து அசத்தினார். டி.ஒய். பாட்டீல் அகாடமியில் நடைபெற்ற 2025 தொடரின் சூப்பர் லீக் குரூப் பி போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய 23 வயதான ஜெய்ஸ்வால் ஹரியானாவிற்கு எதிராக 50 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 101 ரன்கள் குவித்தார். இந்த சதத்தின் மூலம் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை முதல் வெற்றி
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக, டிசம்பர் 12 அன்று நடந்த முதல் சூப்பர் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் மும்பை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி 234 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 42 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.
ஜெய்ஸ்வால் சதம்; சர்ஃபராஸ் கான் அரை சதம்
நிஷாந்த் சந்து 38 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். பின்பு பேட்டிங் செய்த மும்பை அணி 17 ஓவரில் இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால் சதம் அடித்தது மட்டுமின்றி சர்ஃபராஸ் கான் சூப்பர் அரை சதம் விளாசினார். அவர் 25 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 64 ரன்கள் விளாசினார்.
கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில் பார்ம் படுமோசமாக உள்ளது. அதுவும் சுப்மன் கில் கடந்த 14 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவரை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனை சேர்க்க கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையிலும், ஜெய்ஸ்வாலும், சர்ஃபராஸ் கானும் அதிரடியாக ஆடி நாங்களும் இந்திய டி20 அணிக்கு தகுதியான வீரர்கள் தான் என்று பிசிசிஐ மற்றும் கவுதம் கம்பீரிடம் சொல்லாமல் சொல்லியுள்ளனர்.


