இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலுமாக தரையிறக்கப்பட்டது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா அல்லது சிர்சாவிலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருந்தால், பாகிஸ்தான் அதை சுட்டு வீழ்த்தியிருக்க அதிக வாய்ப்பு இருந்தது.
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளில், அதன் விமானப்படை தரையில் இருந்தபோது இந்தியா தோல்வியடைந்தது’’ என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கி பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடியை கொடுத்தது. பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை குறித்து, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான், ‘‘ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே, இந்திய முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது. மக்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், 7 ஆம் தேதி நடந்த அரை மணி நேர வான்வழிப் போரில் இந்தியா முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது’’ எனக் கூறியுள்ளார்.

புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய சவான், "இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலுமாக தரையிறக்கப்பட்டது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா அல்லது சிர்சாவிலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருந்தால், பாகிஸ்தான் அதை சுட்டு வீழ்த்தியிருக்க அதிக வாய்ப்பு இருந்தது. அதனால்தான் விமானப்படை முற்றிலுமாக தரையிறக்கப்பட்டது.
சமீபத்தில், ஆபரேஷன் சிந்தூர் போது, ராணுவம் ஒரு கிலோமீட்டர் கூட நகரவில்லை என்பதை நாங்கள் கண்டோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடந்தது எல்லாம் வான்வழிப் போர் மற்றும் ஏவுகணைப் போர். எதிர்காலத்திலும் போர்கள் இந்த முறையில் நடத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில், 1.2 மில்லியன் வீரர்களைக் கொண்ட ராணுவத்தை நாம் உண்மையில் பராமரிக்க வேண்டுமா? அல்லது அவர்களை வேறு ஏதாவது செய்ய வைக்க முடியுமா?"

போக்ரான் அணு ஆயுத சோதனைகள் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் மிகப்பெரிய தவறு. அந்த நேரத்தில், பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத சக்தி என்ற ஊகம் மட்டுமே இருந்தது. ஆனால் இந்தியா அணு ஆயுத சோதனைகளை நடத்தியபோது, பாகிஸ்தானும் அவற்றை நடத்தியது. இரு நாடுகளும் அணு ஆயுத சக்திகளாக மாறின’’ என அதிர்ச்சிக் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த சவானின் பேச்சுக்குப் பிறகு, பாஜக, மகாராஷ்டிரா காங்கிரஸை விமர்சித்துள்ளது. "சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டதாக சவான் கூறுகிறார். சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகளை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தை காங்கிரஸ் நம்பவில்லை. பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளை காங்கிரஸ் அதிகம் நம்புகிறது" என்று சமூக ஊடக தளமான எக்ஸ்தளத்தில் பிரித்விராஜ் சவானின் பேசியுள்ள வீடியோ காட்சியை பாஜக பகிர்ந்துள்ளது.

