இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மகாத்மா காந்தியை புகழ்ந்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடியுடன் நடைபெற்ற உச்சி மாநாட்டில், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் உக்ரைன் போருக்கான அமைதித் தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வெள்ளிக்கிழமை காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, பார்வையாளர் புத்தகத்தில் காந்தி குறித்து ஒரு குறிப்பை எழுதினார்.
நவீன சுதந்திர இந்தியாவின் நிறுவனர், மனிதநேயவாதி, சிறந்த சுதந்திரப் போராளி என்று காந்தியை தனது குறிப்பில் புடின் புகழ்ந்துள்ளார்.
காந்தி குறித்த புடினின் குறிப்பு
"மகாத்மா காந்தி, அகிம்சை மற்றும் சத்தியத்தின் மூலம் நம் பூவுலகின் அமைதிக்காக அளப்பரிய பங்களிப்பை அளித்தார். அதன் தாக்கம் இன்றும் பொருத்தமானதாக உள்ளது. சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகளை இந்தியா பாதுகாக்கிறது. உலக மக்களுடன் இணைந்து சர்வதேச அரங்கில் அதே கொள்கைகளை மதிப்பீடுளை முன்வைக்கிறது. ரஷ்யாவும் அதையே செய்கிறது.” என ரஷ்ய மொழியில் புடின் எழுதியுள்ளார்.
மேலும், "தற்போது உருவாகி வரும் புதிய, நியாயமான, பல்முனை உலக ஒழுங்கை நோக்கிய பாதையை மகாத்மா காந்தி காட்டினார்" என்றும் தனது குறிப்பில் புடின் குறிப்பிட்டுள்ளார்.
மோடி – புடின் உச்சி மாநாடு
புடின் வியாழக்கிழமை மாலை டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நெறிமுறைகளை மீறி நேரில் சென்று அவரை ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் (Toyota Fortuner) பிரதமர் இல்லத்திற்குப் பயணித்தனர்.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், முப்படை மரியாதை வழங்கப்பட்டது. பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.
பாதுகாப்பு, எரிசக்தி, அமைதி
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் புடினும், மோடியும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். குறிப்பாகப் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் திறன்வாய்ந்த தொழிலாளர்களின் இடப்பெயர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது.
உச்சி மாநாட்டின்போது, உக்ரைன் போருக்கு 'அமைதியான தீர்வு' காண்பதற்கான ஒரு திட்டத்தின் விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக அதிபர் புடின் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியா எப்போதும் "அமைதியின் சாம்பியனாக" இருக்கும் என்றும், அதிக இராணுவ மோதலை விட, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் ஒரு தீர்வை ஆதரிப்பதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
புடினுக்கு விருந்து
இன்று மாலை குடியரசுத் தலைவர் முர்மு அளிக்கும் விருந்தில் கலந்துகொண்ட பின்னர் அதிபர் புடின் நாடு திரும்ப உள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், புடினின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


